Published : 22 Apr 2018 09:31 AM
Last Updated : 22 Apr 2018 09:31 AM

எனக்கு ‘தூள்’ பிடிக்கும்!: பரத்வாஜ் ரங்கன் பேட்டி

சி

னிமாக்காரர்களும் விமர்சகர்களும்கூட தேடிப் படிக்கும் திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மூலம் பெரும் வாசகர் கூட்டத்தைச் சென்றடைந்தவர். இப்போது ‘ஃபிலிம் கம்பெனி’ இணையதளத்தில் எழுதிக்கொண்டிருப்பவரை ஒரு மதிய உணவு இடைவேளையில் சந்தித்தேன்.

உங்களைப் பெரிய அளவில் கொண்டுசேர்த்தது மணிரத்னத்தைப் பற்றிய புத்தகம். எப்படி வந்தது அந்த யோசனை?

அது ‘பென்குவின்’ பதிப்பகத்தின் யோசனை. மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்துக்கு நான் எழுதிய விமர்சனத்தைப் படித்தவர்கள் “உங்களுக்கு மணிரத்னத்தைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. ஒரு புத்தகம் எழுதுங்கள்” என்றார்கள். முதலில் அவருடன் உரையாடி எழுதும் எண்ணம் இல்லை. ஒருமுறை படங்களுக்காகத் தொடர்புகொண்டபோது விஷயத்தைக் கேட்டவர், “நேரில் வாங்களேன், பேசுவோம்” என்றார்.

நீண்ட பேட்டிகளுக்கு எப்படித் தயாராகிறீர்கள்?

எனக்குப் பேட்டிகள் என்ற பெயரில் வெறும் தகவல்களைப் பெறுவதிலோ, ஆளுமைகளைக் குதறுவதிலோ ஆர்வம் இல்லை. நேர்மறையாக அவர்களை அணுகுவதன் மூலம் உரையாடல் மூலம் அவர்களை வெளிக்கொணர முயற்சிப்பேன். ஒருவரைப் பேட்டி எடுக்கப்போகிறேன் என்றால், அவருடைய எல்லாப் படங்களையும் ஒரு முறை மீண்டும் பார்த்துவிடுவேன். அவர்களுடைய முந்தைய பேட்டிகளைப் படிப்பேன். அவர்களுடைய முந்தைய பதில்களிலிருந்தே என்னுடைய கேள்விகளை உருவாக்குவேன்.

இன்றைக்கு செல்வாக்கு மிக்க ஒரு சினிமா விமர்சகர் நீங்கள்… இந்த வேலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் ஒரு ஸ்டார் அல்ல. எனது விமர்சனத்துக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது என்றாலும், எல்லாத் தரப்பு மக்களையும் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதாக நான் கருதிக்கொள்ளவில்லை. சில நிகழ்ச்சிகளில் ‘சார், ஒரு செல்ஃபி’ என்று சிலர் வருவார்கள். சந்தோஷம். ஆனால், ‘இது ஏ சென்டர்; பி சென்டரில் உன் பெயர்கூட யாருக்கும் தெரியாது’ என்றும் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். நான் ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து, அது நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போது யாருக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும். அது கிடைத்திருக்கிறது. இன்னும் மேம்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x