Published : 24 May 2024 03:50 PM
Last Updated : 24 May 2024 03:50 PM
அம்மாவின் பேச்சைக் கேட்டு எந்த வம்புக்கும் செல்லாத தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ ஆதி. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் வானதியை (காஷ்மீரா) காதலிக்கிறார். ஆரம்பத்தில் ஒருதலையான காதல், நாயகனின் ‘விடா’முயற்சியால் டபுள் சைடாகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்துக்கான பணிகள் தொடங்க, இடையில் நிகழும் நிகழும் பிரச்சினையால் அமைதியான ஆதி வெகுண்டெழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு, நீதிக்கான போராட்டத்தில் இறங்குகிறார். அது என்ன போராட்டம்? அதில் வெற்றி கிடைத்ததா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
‘கிளப்புல மப்புல திரியிற பொம்பள’ என்ற ஆல்பம் பாடலில் கவனம் பெற்ற ஆதி, அங்கிருந்து பல மைல்கள் நகர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை பேசத் துணிந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அதிலும் பெண்களின் ஆடை, அவர்கள் மீதான அத்துமீறல்களுக்கு காரணமில்லை என்ற இடம் கவனிக்க வைக்கிறது.
கொங்கு ஸ்லாங், மேஜிக் வால் ஐடியா, ‘இது ஆக்ஷன் மேடம்’ என்ற வைரல் நிகழ்ச்சியை நுழைத்தது, மாணவர்களுடன் ஆதி செய்யும் கலாட்டா, தந்தையின் அட்டகாசம், கூடவே ஹீரோயிசம், பாடல், காதல், சண்டை என்ற கமர்ஷியல் எல்லைக்குள் அழுத்தமான கருவை நுழைத்து பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்.
மேற்கண்ட அம்சங்கள் படத்தை எங்கேஜிங்காக கொண்டு செல்ல முயல்வதுடன் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், பெற்றோராலும், சமூகத்தாலும் தனித்துவிடப்படுகிறாள் என்பதை காட்ட முயற்சித்திருப்பது நன்று. “எங்களோட ட்ரெஸ்ஸ வாங்கி பாருங்க, அதுல எத்தன ஆண்களோட கைரேகை இருக்கும்னு தெரியும்” போன்ற வசனங்களும், பாதிக்கப்பட்ட பெண்ணை வசைபாடி, மன அழுத்தத்தை கூட்டும் இன்றைய சோஷியல் மீடியா உலகு குறித்தும், ‘ஊடக’ பசி குறித்தும் பேசியது ஓகே தான்.
ஆனால், வெகுஜன ரசனைக்கும் - ஹீரோயிசத்துக்கும் இடையில் கரும்பு மிஷினில் மாட்டிக்கொண்ட கன்டென்ட் தேவையான சாரை பிழியாமல் வறண்டிருப்பது சிக்கல். பாலியல் துன்புறுத்தலை அழுத்தமாக பேசுவதை விட, அதை மையமாக வைத்து நாயகனை ‘ஹீரோ’வாக்க முயல்வதிலேயே படம் கவனம் செலுத்துகிறது.
பாதிக்கப்பட்ட நந்தினி கதாபாத்திரத்தின் மனநிலை என்ன என்பதை பதிவு செய்ய தவறி, குற்றவாளிகளுக்கு எதிராக திட்டம் தீட்டவும், அடியாட்களை அடித்து துவம்சம் செய்வதற்கு முக்கியத்தும் அளிப்பதால், சொல்ல வரும் விஷயம் மேலோட்டமாக கடக்கிறது. கோர்ட் ரூம் டிராமாவில் நீதிபதியை சுவாரஸ்யப்படுத்தியிருக்கும் அளவில் வாதங்களை சுவாரஸ்யமாக்கவில்லை. அதேபோல படத்தில் நிறைய இடங்களில் லிப் சிங் பிரச்சினை அப்பட்டமாக தெரிகிறது.
ஆதி வழக்கமான தன்னுடைய நடிப்பால் ஆதிக்கம் செலுத்த தவறவில்லை. உணர்வுபூர்வமான நடிப்பில் ‘பாஸ்’மார்க் வாங்குகிறார். இன்னும் கூட ஸ்கோர் செய்யலாமே பாஸ்! ஆக்ரோஷம், எமோஷனல் காட்சிகளைத் தவிர்த்து மற்ற ஏரியாவில் நாயகி காஷ்மீரா தேவையான நடிப்பை கடத்துகிறார். ஆரம்பத்தில் பில்டப் கொடுக்கப்பட்ட தியாகராஜனின் வில்லன் கதாபாத்திரம் போக போக புஸ்வானாமாகவிடுகிறது.
இளவரசு, தேவதர்ஷினி, ராஜா, வினோதினி, அனிகா சுரேந்தர் யதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறது. பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன் சீனியர் நடிகர்கள் என்பதை உணர்த்துகின்றனர். முனிஷ்காந்த், பிரச்சனா பாலசந்திரன், அபிநக்ஷத்ரா, மதுவந்தி, பிரனிக்ஷா, உள்ளிட்டோர் தேவையான பங்களிப்பை செலுத்த தவறவில்லை.
ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை காட்சிகளுக்குத் தேவையான பரபரப்பையும், எமோஷனலையும் கடத்துவதால் படத்துடன் ஒன்ற முடிகிறது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் இடைவேளை பேனிங் ஷாட்டும், ஜிகே பிரசன்னாவின் கச்சிதமான ‘கட்’ஸும் பலம்.
மொத்தமாக படம் வழக்கமான பெண்களை மீட்கும் ஆண் ‘ஹீரோயிச’த்துடனும், பிரச்சார தொனியை சுமந்துகொண்டும், வெகுஜன சினிமா ரசனையுடன் முடிந்த அளவுக்கு போராடிக்காமல் நகர்ந்து ‘பாஸ்’ மார்க்குடன் ஸ்கோர் செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT