Published : 28 Apr 2018 11:01 AM
Last Updated : 28 Apr 2018 11:01 AM
5 ஆண்டுகளுக்கு முன்பு இரு குடும்பங்களும் சேர்ந்து செய்த பாவம் அவர்களை விடாமல் விரட்டினால் அதுவே 'தியா'.
கல்லூரிப் பருவத்தில் கால்வைக்கும் முன்னதாகவே சாய் பல்லவியும், நாகா ஷவுரியாவும் காதலிக்கின்றனர். அதற்குப் பிறகும் காதல் தொடர்கிறது. சாய் பல்லவி மருத்துவர் ஆகிறார். நாகா ஷவுரியா இன்ஜினீயர் ஆகிறார். இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.
ஆனால், சாய் பல்லவி அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கவோ, கொண்டாடவோ முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் இருவரது வீட்டிலும் திடீர் மரணங்கள் நிகழ்கின்றன. அது ஏன் நிகழ்கிறது? அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது திரைக்கதை.
'வனமகன்' படத்துக்குப் பிறகு விஜய் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் 'தியா'. உணர்வுப்பூர்வமான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு கருவை மையமாகக் திரைக்கதை அமைத்திருக்கிறார். தற்போதைய சூழலில் அவசியமான கருத்தைப் பதிவு செய்த இயக்குநரின் அக்கறையை வரவேற்கலாம்.
சாய் பல்லவி, நாகா ஷவுரியா, ஆர்.ஜே.பாலாஜி, நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி, பேபி வெரொனிகா என பலரும் படத்தில் இருக்கிறார்கள். சாய் பல்லவி படத்தின் அடிநாதமாக இருக்கிறார். ஆனால், படத்தில் அவருக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. வெறித்துப் பார்ப்பது, அமைதி காப்பது, ஓவியம் வரைவது, குலுங்கி அழுவது என நடித்தாலும் அதில் உண்மையான உணர்வை பிரதிபலிக்கவில்லை. நாகா ஷவுரியா ஏன் இந்தக் கதாபாத்திரத்துக்கு என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. சோகமோ, அதிர்ச்சியோ, பயமோ எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முக பாவனைகள் தந்து சோதிக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி நகைச்சுவை என்ற பெயரில் பேசுவதும், நடந்துகொள்வதும் ரசிகர்களின் சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவால். நிழல்கள் ரவி, ரேகா, சந்தானபாரதி ஆகியோர் செட் பிராப்பர்டிகளாக வந்துபோகிறார்கள். பேபி வெரொனிகாவை பொம்மையாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களை வார்த்தெடுப்பதில் இயக்குநர் விஜய் கவனம் செலுத்தத் தவறியிருக்கிறார். சாய் பல்லவி, வெரோனிகா உள்ளிட்ட மையக் கதாபாத்திரங்களின் நடிப்பையும் முழுமையாக வெளிக்கொணராதது பெருங்குறை.
நீரவ் ஷாவின் கேமரா அழகியலை மட்டுமே சுமந்திருகிறது. பார்க்கும் இடமெல்லாம் பளிச் தோற்றம் தந்து விளம்பர மொழியை திரையில் திணித்திருக்கிறார்கள். அது எடுபடாமல் அந்நியத்தன்மையின் அடையாளமாய் நீள்கிறது. எடிட்டர் ஆண்டனி கூறியது கூறலை காட்சிகளில் இடம்பெறச் செய்திருக்கிறார். அதைக் கத்தரி போட்டு தவிர்த்திருக்கலாம்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கதைக்குத் தேவையான கனமான பின்னணி இசையைத் தந்து படத்தை தனி ஆளுமையாக காப்பாற்றுகிறார்.
இயக்குநர் விஜய் கதைக்கருவுக்கு தந்த முக்கியத்துவத்தை திரைக்கதையில் தரவில்லை. அதனாலேயே எல்லாவற்றிலும் சறுக்கியிருக்கிறார். சாய் பல்லவியும்- நாக ஷவுரியாவும் காதலர்கள்தான் என்பதற்கு படத்தில் அழுத்தமான காட்சிகள் இல்லை. அந்தக் காதலில் எந்தவித உயிர்ப்பும் தென்படவில்லை. குழந்தை குறித்த ஏக்கங்கள், வலிகள் என் எதுவும் படத்தில் வலிமையாக சொல்லப்படவில்லை. 5 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவங்களும் நம்பும்படியாகவும், ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இல்லை. மொத்தத்தில் திகில், உருக்கம் என எதுவுமே இல்லாமல் பிளாஸ்டிக் முகங்களின் வழியாகவே 'தியா' கடந்துபோகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT