Published : 21 May 2024 02:36 PM
Last Updated : 21 May 2024 02:36 PM
சென்னை: சூரி, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சூரியின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். சசிகுமார், உன்னி முகுந்தன் நல்ல நண்பர்கள். உன்னி முகுந்தனிடம் விசுவாசியாக இருக்கிறார் சூரி.
விசுவாசத்தின் முழு உருவமாக இருக்கும் சூரி, தன்னை வளர்த்த குடும்பத்துக்காக ‘சம்பவம்’ ஒன்றை செய்ய அதனால் பிரச்சினை எழுவதாக ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ஆக்ஷனும், கதறலும், மிரட்டலுமாக முழு ட்ரெய்லரிலும் கவனம் பெறுகிறார் சூரி. அவரின் வெறித்தனமான நடனம் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என தெரிகிறது.
பின்னணியில் இசைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை தனித்து தெரிகிறது. இவையெல்லாம் கோர்த்து உருவாகியிருக்கும் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment