Published : 21 May 2024 06:17 AM
Last Updated : 21 May 2024 06:17 AM

சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்; இசைதான் எனது மூச்சு: இளையராஜா உருக்கம்

சென்னை: இசைதான் எனது மூச்சு என்றும், சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது.

திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

ஒருவாரம் நடைபெற உள்ள இந்த மாநாடு வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் இருந்து 220 கலைஞர்கள் பங்கேற்று சிவ வாத்தியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர்.

விழாவில் சிறப்பு அம்சமாக சென்னை ஐஐடியில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும்மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், திரிபுரா ஆளுநர் இந்திரசேனாவுக்கும் 3டி வடிவிலான கையடக்க வீணை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும்போது, “கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக சிறுவயதில் 400 ரூபாயுடன்வந்தேன்.

இசை என்றால் என்னவென்று அப்போது எனக்கு தெரியாது. இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது.

சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை” என்றார். தொடர்ந்து திரிபுரா ஆளுநர் இந்திரசேனா பேசும்போது, “தமிழ் மொழியானது ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றை கொண்ட மொழி. நாட்டில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 6 மொழிகள் செம்மொழிகளாக அந்தஸ்து பெற்றன.

அதில் முதல் மொழியாக தமிழ்தான் செம்மொழியாக அந்தஸ்து பெற்றது. அடுத்த 7 நாட்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் புது உலகுக்குள் அடியெடுத்து வைக்க போகிறீர்கள். இந்த அனுபவத்தை யாரும் மறக்கமாட்டீர்கள்” என்றார்.

இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஸ்பிக் மேகே அமைப்பின் தேசிய தலைவர் ராதா மோகன் திவாரி, செயலர் சப்யசாச்சி, சென்னை ஐஐடி டீன் (மாணவர் நலன்) சத்ய நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x