Published : 28 Apr 2024 08:07 AM
Last Updated : 28 Apr 2024 08:07 AM
வேலூரில், எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) அடியாளாக இருக்கிறார், ரத்னம் (விஷால்). அந்த ஊருக்கு வரும் மல்லிகாவை (பிரியா பவானி சங்கர்) ஒரு ரவுடிக் கும்பல் கொலை செய்ய விரட்டுகிறது. அவரைக் காப்பற்றுகிறார் விஷால். பிரியாவைக் கொலை செய்ய முயற்சிப்பது ஆந்திரா - தமிழ்நாடு எல்லையான நகரியில் அடாவடி செய்து கொண்டிருக்கும் ராயுடு குரூப் (முரளி சர்மா, ஹரீஸ் பெரேடி, வேட்டை முத்துக்குமார்). இவர்கள் பிரியாவை ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள்? அவர்களிடமிருந்து பிரியாவை, விஷால் ஏன் காப்பாற்ற விரும்புகிறார் என்பது தான் ரத்தம் தெறிக்கும் ‘ரத்னம்’ கதை.
ரவுடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான். ஆனால், அந்தக் கதையை, ஒரு பெண்ணைச் சுற்றி நகர்வதுபோல படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி. எப்போதும் காட்சிகளை விறுவிறுப்பாகவும் அதற்கேற்ப திரைக்கதையைப் பின்னுவதிலும் ஹரிக்கு தனி பெயர் உண்டு. இதிலும் அதற்கு மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், முந்தைய படங்களின் சாயலிலேயே இதையும் இயக்கியிருப்பதால் ஒட்ட முடியவில்லை. இதில் நாயகனை ரவுடியாகக் காட்டியிருப்பதுதான் வித்தியாசம்.
சமுத்திரக்கனியின் அரவணைப்பில் அடாவடி, வெட்டுக்குத்து என்றிருக்கும் விஷால், பிரியாவைப் பார்த்ததும் அவரைச் சுற்றத் தொடங்குவதற்குப் பின்னணியில் வைத்திருக்கும் திருப்பம்தான் படத்துக்கான மையக் கருவாகவும் அமைகிறது.
நிமிர்ந்து உட்கார வைக்கும் இந்தக் காட்சி, பின்னர் வில்லன் கோஷ்டிக்கும் - விஷாலுக்குமான மோதலாக மாறி அலுப்பூட்டுகிறது. வில்லன்களின் துரத்தலும், அவர்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளும் ஒரு கட்டத்தில் சோதித்து விடுகின்றன. ஹரி படங்களில் இதுபோன்ற காட்சிகளின்போது, பாடல்களும், காமெடியும் பேலன்ஸ் செய்யும். ஆனால், இதில் அந்த ரெண்டும் மிஸ்ஸிங்.
ஒரே ஊரில் இருந்தாலும் பிரியாவின் உருவ ஒற்றுமை, விஷாலின் தாத்தா குடும்பத்துக்குத் தெரியாமல் போவது, போலீஸ் அதிகாரி வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டுகொள்ளையடித்த நகை, பணத்தைப் பிரித்து வைப்பது, எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில், ரவுடித்தனம் மூலமே சமுத்திரக்கனி நல்லது செய்ய முடிவது போன்ற பூச்சுற்றல்கள், படம் நெடுகிலும் வருகின்றன.
ரவுடி கதாபாத்திரத்தில் விஷால் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவர் உயரமும், உடற்கட்டும் அதற்கு உதவுகிறது. படம் முழுவதும் வரும் பிரியா தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி கதாபாத்திரம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. வில்லன்களாக வரும் முரளி சர்மா, ஹரீஸ் பெரேடி, வேட்டை முத்துக்குமார் நடிப்பில் குறையில்லை. யோகிபாபு சிரிக்க வைக்கப் படாதபாடுபடுகிறார். ஒரு காட்சியில் வந்தாலும் ஈர்க்கிறார் கவுதம் வாசுதேவ மேனன்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசையில் அதை நேர் செய்கிறார். சுகுமார் ஒளிப்பதிவில் குறையில்லை. இழுவையான சேசிங் காட்சிகளில் படத் தொகுப்பாளர் டி.எஸ்.ஜெ கத்திரி போட்டிருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘ரத்னம்’ ஜொலித்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
நேற்றுதான் படம் பார்த்தேன் ஹரி மீதிருந்த மரியாதையே போய்விட்டது சிங்கம்படம் இயக்கிய ஹரியா இது இனி எழுவது கஷ்டம் இப்படியொருபடம் ஹரியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை விஷால் இமேஜ் டோட்டல் டேமேஜ் அனைத்துகதாபாத்திரங்களின் உழைப்பும் வேஷ்ட் உங்களை நம்பிவந்தவர்களை இப்படி கழுத்தருத்துவிட்டீர்களே ஹரி
0
0
Reply