Published : 18 Apr 2018 10:26 PM
Last Updated : 18 Apr 2018 10:26 PM
கடந்த 47 நாட்களாகத் தமிழ்த் திரையுலகில் எந்த புதுப்படமும் வெளியாகாதது மட்டுமன்றி, எந்தவிதப் பணியும் நடக்கவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில், “ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை ஒத்திவைக்கப்படுமா ? செயல்படாத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே...” என்று ட்வீட் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இவரது ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது மட்டுமன்றி, பல்வேறு கிண்டல்களுக்கும் ஆளானார். இந்த ட்வீட்டிற்கான காரணம் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, “திரையுலகப் போராட்டம் முடிந்திருப்பது நல்ல விஷயம்தான். அதனை வரவேற்கிறேன். அதேசமயம், ஐபிஎல் போட்டியை ஏன் நிறுத்தினார்கள்? மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தானே போராட்டம் நடத்தினார்கள்.
அதேமாதிரி படங்களின் வெளியீட்டையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை நிறுத்தினாலும் கவனம் ஈர்க்கலாமே..? ஏனென்றால், படம் வெளியாகி மக்கள் கொடுக்கும் டிக்கெட் பணத்தில் இருந்து வரி செலுத்துகிறோம். அதனால், பட வெளியீட்டையும் நிறுத்தி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கலாமே என்று ட்வீட் போட்டேன். ஐபிஎல் விளையாட்டு பொழுதுபோக்கு என்றால், சினிமாவும் பொழுதுபோக்குத்தானே... ஆகையால், பட வெளியீட்டை நிறுத்தினால், இன்னும் பலருடைய கவனத்தை ஈர்க்க முடியும். உடனே, ‘படமில்லை என்பதால் ட்வீட் போடுகிறார்’ என்கிறார்கள். 3 படங்களைத் தயாராக வைத்திருக்கிறேன். அதில், 2 படங்கள் தணிக்கை முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளன” என்று தெரிவித்தார்.
உங்களுடைய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படமும் வெளியாகி இருக்கிறதே...
புதுப்பட வெளியீட்டிற்கும், பழைய படத்தை மறுபடியும் வெளியிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கடந்த 45 நாட்களில் கிட்டத்தட்ட 30 பழைய படங்கள் மறுபடியும் வெளியாகியுள்ளன. அதில், போன வாரம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெளியானது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தமிழ்த் திரையுலகம் நடத்திய போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை?
திரையுலகினர் நடத்திய போராட்டத்தில், சத்யராஜ் சாரைத் தவிரப் பலரும் பேசவில்லை. இங்கிருக்கும் திரையுலகினருக்கு அரசைக் கண்டால் பயம். அதுமட்டுமின்றி, 2 மணி நேரம்தானே போராட்டமும் நடந்தது. முதலில் போராட்டம் எனச் சொல்வதைவிட மவுன விரதம் எனச் சொல்லலாம். அன்றைய தினம், கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகி வீட்டுத் திருமண விழா இருந்தது. அப்பா போக வேண்டியது. ஆனால், அவர் காவிரி மீட்புப் பயணத்துக்குச் சென்றுவிட்டதால், நான் சென்றேன். அங்கிருந்து அப்பாவுடன் காவிரி மீட்புப் பயணத்துக்குச் சென்றுவிட்டேன். எப்படியோ... காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டத்தில்தானே இருந்திருக்கிறேன்.
உங்களுடைய ட்வீட்டிற்கு எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்திருக்கிறதே..?
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கத்தான் செய்வார்கள். ‘பட வெளியீட்டை நிறுத்தலாமே...’ என்று நான் சொன்னவுடன் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டுவிடுவார்களா என்ன? நான் கூறியது என் தனிப்பட்ட கருத்து. எப்போதுமே என்மீது காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், அரசியல் பின்புலம்தான். இது நான் எதிர்பார்த்ததுதான். இதையெல்லாம் மீறித்தான் தற்போதைய அரசியல் பயணம் இருக்கிறது. இவர்களுக்குப் பயந்து ஓடிவிட வேண்டுமா என்ன?
ஐபிஎல் பார்த்தது போல புகைப்படம் வெளியானதே...
4 வருஷத்துக்கு முன்னால் ஐபிஎல் பார்த்த புகைப்படத்தை இப்போது வெளியிட்டு சிலர் திட்டினார்கள். அந்தளவுக்குக் கூட அறிவில்லாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அதிமுக மற்றும் பாஜகவினர்தான் என நினைக்கிறேன்.
ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி விளையாடுவதால் தான்...
(கேள்வியை முடிக்கும் முன்பே) முதலில் சன் ரைசர்ஸ் அணிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் என்ன அந்த அணியின் ஓனரா அல்லது பங்குதாரரா? இந்தக் கேள்வியை நீங்கள் சன் டிவியிடம் தான் கேட்க வேண்டும். அது அவர்களுடைய அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT