“வாழ்வில் ஒருமுறை மட்டுமே...” - ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவுக்கு சூர்யா வாழ்த்து

“வாழ்வில் ஒருமுறை மட்டுமே...” - ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவுக்கு சூர்யா வாழ்த்து

Published on

கொச்சி: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடுஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனித்துள்ளார். படம் இந்த வாரம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உயிர்பிழைத்தல் குறித்த ஒரு கதையை சொல்வதற்கான 14 வருட கனவு இது. இதனை சாத்தியமாக்குவதற்கான இந்த மாற்றமும், கடின உழைப்பும் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கக் கூடியவை. ஒரு பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயாராகும் இயக்குநர் பிளெஸ்ஸி மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in