Published : 20 Mar 2024 02:29 PM
Last Updated : 20 Mar 2024 02:29 PM
சென்னை: “இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா மற்றொன்று ரஜினிகாந்த். ஒன்று நடக்கிறது. இது எனக்கு மிகப் பெரிய கர்வத்தை கொடுக்கிறது” என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் நம்புகிறேன். அதையே அடிக்கடி சொல்வேன். நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லையென்றால், இளையராஜாவின் பாடலைக் கேட்டு மெய் மறந்து தூங்குவோம். ஆனால், நான் பல இரவுகள் இளையராஜாவாகவே நடித்தால் எப்படியிருக்கும் என நினைத்து நினைத்து எண்ணி தூக்கமில்லாமல் இருந்திருக்கிறேன்.
இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா மற்றொன்று ரஜினிகாந்த். ஒன்று நடக்கிறது. இந்த இடத்துக்கு வர முடிந்து, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்பது எனக்கு மிகப் பெரிய கர்வத்தை கொடுக்கிறது. நான் இளையராஜாவின் பக்தன். அவரின் இசை தான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும்.
இதைத் தாண்டி அவரது இசை எனக்கு நடிப்பு ஆசானும் கூட. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத காலத்திலிருந்து இன்று வரை, ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்பு அந்தக் காட்சிக்கு தகுந்த மனநிலையில் இருக்கும் இளையராஜாவின் பாடலையோ, பிஜிஎம்-மையோ கேட்பேன்.
அந்த இசை அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும். அதனை அப்படியே உள்வாங்கி நடிப்பேன். அப்படி நான் நடிப்பதை வெற்றிமாறன் ஒரு சில தடவை பார்த்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய சவால். பொறுப்பு என கூறுகிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. ஏனென்றால் அந்த இசை இன்றும் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும்.
தற்போது நடந்து வரும்போது கூட, இளையராஜாவிடம் ‘நீங்க முன்னாடி போங்க உங்கள பின்தொடர்ந்து வரேன்’ன்னு சொன்னேன். “நான் என்ன உனக்கு கைடா” என்று கேட்டார். ஆம் நீங்கள் தான் வழிநடத்தி வருகிறீர்கள். ‘விடுதலை’ படத்தின் பாடல் பதிவின்போது, இளையராஜாவிடம் ‘நீங்க இங்கேயே இருப்பீங்களா?’ என கேட்டேன். “நான் எப்போ உன் கூட இல்ல” என கேட்டார். உண்மைதான்.
ஒரு கலைஞனாக இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இந்த அழைப்பு இளையராஜாவிடமிருந்தே வந்தது கூடுதல் மகிழ்ச்சி. இசையின் கடவுளாக நடிக்கும் வாய்ப்பை நினைத்து நெகிழ்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT