Published : 14 Feb 2018 12:43 PM
Last Updated : 14 Feb 2018 12:43 PM
ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'பரியேறும் பெருமாள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'காலா' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே, நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் புதிய படமொன்றை தயாரிக்கத் தொடங்கினார் இயக்குநர் ரஞ்சித். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து வரும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு 'பரியேறும் பெருமாள்' என்று தலைப்பிடப்பட்டு திருநெல்வேலியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இயக்குநர் ரஞ்சித், இயக்குநர் ராம் மற்றும் சந்தோஷ் நாராயணன் மூவரும் இணைந்து போஸ்டரை தங்களுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்கள்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நடிக்க, அவருக்கு நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT