Last Updated : 02 Mar, 2024 03:53 PM

 

Published : 02 Mar 2024 03:53 PM
Last Updated : 02 Mar 2024 03:53 PM

போர் Review: ஆடியன்ஸ் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் யுத்தம்!

சிறு வயதில் நடக்கும் ஒரு கசப்பான சம்பவத்தால், தனது சீனியர் பிரபு (அர்ஜுன் தாஸ்) மீது பல ஆண்டுகள் கழித்தும் கடும் கோபத்தில் இருக்கிறார் யுவா (காளிதாஸ் ஜெயராம்). மருத்துவக் கல்லூரியில் இவர்களுடன் படிக்கும் சக மாணவர்களான காயத்ரி (டி.ஜே.பானு), ரிஷிகா (சஞ்சனா நடராஜன்) ஆகியோரை பிரதானமாக சுற்றி நடக்கிறது கதை.

கல்லூரியில் நடக்கும் தேர்தலில் அரசியல்வாதியின் மகளை எதிர்த்து போராடும் புரட்சிப் பெண் காயத்ரி, சக மாணவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்தாலும் தனக்குள்ளே சோகத்தை சுமந்து திரியும் ரிஷிகா என செல்லும் கதை, ஒரு யுத்தத்தை நோக்கி நகர்கிறது. இறுதியாக போரில் வென்றது யார் என்பதை தலையை சுற்றி மூக்கைத் தொட்டு சொல்கிறது ‘போர்’.

இரண்டு பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதல் தான் கதை. இதில் யார் ஹீரோ யார் வில்லன் என்பதெல்லாம் இல்லை. இருவருக்குமே அவரவர் தரப்பு நியாயங்கள் இருக்கும். தமிழுக்கு மிக பரிச்சயமான இதே கதைக்களத்தில் ’அக்னி நட்சத்திரம்’, ‘நேருக்கு நேர்’, ‘இருவர்’, ‘ஆயுத எழுத்து’ என பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றிலிருந்த சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ‘போர்’-ல் முற்றிலுமான மிஸ்ஸிங்.

படம் தொடங்கும்போது காளிதாஸ் - அர்ஜுன் தாஸ் இருவருக்கும் இடையே நடக்கும் கிளைமாக்ஸ் சண்டையின் சிறிய துணுக்கு காட்டப்படுகிறது. அதன்பிறகு இருவரது பின்னணியும் பல சாப்டர்களாக விரிகின்றன. இப்படி ஒவ்வொரு சாப்டர்களாக காட்டப்படுவது படத்தின் திரைக்கதை ஏதாவது உதவியதா என்றால் இல்லை. முதலில் இந்த படத்தின் நோக்கம் என்ன என்பதிலேயே எந்த தெளிவும் இல்லை.

படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒரு யுத்தத்தை நோக்கித்தான் திரைக்கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் தொடர்பே இல்லாமல் கல்லூரி எலெக்‌ஷன், சாதி பிரச்சினை, காதல், பெண் சுதந்திரம், தன்பாலின ஈர்ப்பு என எங்கெல்லாமோ செல்கிறது. அவற்றையாவது அழுத்தமாக பேசியதா என்றால் அதுவும் இல்லை. கதைக்கு தொடர்பே இல்லாமல் திணிக்கப்பட்ட காட்சிகளாகத்தான் அவை வருகின்றன.

இயக்குநர் பிஜோய் நம்பியாரின் முந்தைய படங்களைப் போலவே இதிலும் இயல்புத்தன்மை முற்றிலும் பொருந்தாத கதைமாந்தர்கள். மருத்துவக் கல்லூரி மாணவரான அர்ஜுன் தான் படிப்பை முடித்தும் அதே ஹாஸ்டலில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கல்லூரி வளாகத்தில் அடிதடியில் ஈடுபடுகிறார். கேட்டால் கேண்டீன் இஞ்சி டீ நன்றாக இருப்பதால் அங்கேயே தங்கிவிட்டாராம். அந்த கல்லூரியையே கூட தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே கூட பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. கடைசியாக இது போன்ற ஒரு கல்லூரியை ‘செக்ஸ் எஜுகேஷன்’ வெப் தொடரில் பார்த்தது. அதில் கூட அவ்வப்போது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரை காட்டுவார்கள். ஆனால் இந்த கல்லூரி முழுக்க முழுக்க மாணவர்களால், மாணவர்களைக் கொண்டே மாணவர்களுக்காக நடத்தப்படும் அதிசயக் கல்லூரி.

படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் தொடங்கி துண்டு கதாபாத்திரங்கள் வரை ஏன் தமிழை புதிதாக கற்றுக் கொண்டவர்கள் போல பேசுகிறார்கள் என தெரியவில்லை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே கூட இயல்பை மீறிய மிகைத்தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா, டி.ஜே. பானு என யாருடைய கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. இதனால் எந்த கதாபாத்திரத்தோடும் நம்மால் கடைசி வரை ஒட்டவே முடியவில்லை.

படத்தில் இருக்கும் ஒரே பாராட்டத்தக்க விஷயம் ஒளிப்பதிவு மட்டுமே. தன்னுடைய குருநாதர் மணிரத்னம் போல கேமரா கோணங்களை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர். ஜிம்ஷித் காலித் மற்றும் பிரிஸ்லி ஆஸ்கர் டிசோஸா இருவரும் உழைப்பும் ஒளிப்பதிவில் தெரிகிறது. பின்னணி இசை, பாடல்கள் என எதுவும் மனதில் நிற்கவில்லை.

படத்தின் இடைவேளை வரை, ஏன் இடைவேளைக்கு பிறகுமே கூட அந்த இறுதி போருக்கான நோக்கம் திரைக்கதையிம் வரவில்லை. அதற்கான சிறிய தீப்பொறி கூட எந்த இடத்திலும் நிகழவில்லை. இதுபோன்ற படங்களில் இரண்டு ஹீரோக்களும் எப்போதும் மோதிக் கொள்வார்கள் என்று பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்வதுதானே பிரதானமாக இருக்கவேண்டும். ஆனால் இங்கு க்ளைமாக்ஸுக்கு சற்று முன்னால்தான் ஓர் அற்ப காரணத்துக்காக அந்த ‘போர்’ நடக்கிறது. அதுவரை வெறும் ‘அக்கப்போர்’ மட்டுமே. க்ளைமாக்ஸ் சண்டையுமே கூட ஆளை விட்டால் போதும் என்ற மனநிலையையே ஏற்படுத்துகிறது.

படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தலைப்பிலேயே குறியீடாக வைத்த இயக்குநரை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. மொத்தத்தில் ‘போர்’ - ஆடியன்ஸ் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் யுத்தம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x