Published : 01 Mar 2024 11:59 AM
Last Updated : 01 Mar 2024 11:59 AM
சென்னை: போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். மேலும் அவரையும், அவரது கூட்டாளிகளையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’, அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து அமீர் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்த நிலையில், தற்போது காணொலி வாயிலாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், “என்னுடைய ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத்தெளிவாக விளக்கியபிறகும், சிலர் தொடர்ச்சியாக சமூக வலைதளப்பக்கங்களில் குற்றச் செயல்களோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அடிப்படையாகவே மது, பாலியல் தொழில், வட்டி இது போன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாத்தங்களைக் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான். இது போன்ற ஒரு குற்றச்செயலில் என்னை நீங்கள் தொடர்புப்படுத்தி பேசுவது என்பது, எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, எனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர, வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்துவிடமுடியாது. நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் நான் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோதனை காலகட்டத்தில் என்மீது அன்பு கொண்டு, நம்பிக்கை கொண்டு எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குத் தயார்
— Valaipechu J Bismi (@jbismi_offl) March 1, 2024
இயக்குநர் அமீர் அறிவிப்பு pic.twitter.com/5aer1IMaX9
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT