Published : 10 Feb 2018 07:26 PM
Last Updated : 10 Feb 2018 07:26 PM
மேன்ஷனுக்கு சொந்தமானவரும், அதை பரம்பரை பரம்பரையாக லீஸுக்கு நடத்திக் கொண்டிருப்பவரும் சேர்ந்து அவர்களின் பொது எதிரியை தேடிப் புறப்பட்டால் அதுவே 'கலகலப்பு 2'.
குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்க முடியாமல் கலங்குகிறார் ஜெய். அவர் தந்தை குடும்ப வாழ்க்கையைத் துறந்து சாமியாராகப் போய்விடுகிறார். போஸ்டரில் தன் தந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் ஜெய், அவரைக் கொல்லத் துடிக்கிறார். அப்போது பூர்வீக சொத்து காசியில் இருப்பதாக தந்தை சொல்ல, ஜெய் அந்த சொத்தை விற்று செட்டில் ஆகலாம் என்ற கனவுடன் காசிக்குச் செல்கிறார். அங்கே ஜீவா நடத்தும் பழைய மேன்ஷனில் தங்கி அவஸ்தைப்படுகிறார். அருகில் பரதநாட்டியம் ஆடும் நிக்கி கல்ராணியைம் கண்டதும் அவருக்கு ஆறுதல் ஏற்படுவதோடு, காதல் மலர்கிறது.
ஜீவா தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் படலத்திற்கு தயாராகும் போது மாப்பிள்ளை சதீஷின் தங்கை கேத்ரீன் தெரசாவைக் கண்டதும் காதலில் விழுகிறார். சதீஷ் இல்லற வாழ்க்கை தேவையில்லை என்று சாமியாராக முயல்கிறார். ஜெய் தன் சொத்து அந்த மேன்ஷன் தான் என்பதைத் தெரிந்துகொண்டு ஜீவாவிடம் சமாதானமாகிறார். இதனிடையே முன்னாள் அமைச்சர் மதுசூதன ராவ் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்காமல் ஒரு லேப்டாப்புடன் காசிக்கு எஸ்கேப் ஆகும் ராமதாஸ், அந்த லேப்டாப்பைக் கொடுக்க 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்று விலை பேசுகிறார். ராமதாஸை தீர்த்துக் கட்ட மதுசூதனராவ், இன்ஸ்பெக்டர் ராதாரவியை அனுப்புகிறார். இவர்கள் எல்லோரும் எப்படி சந்திக்கிறார்கள், ஜீவா, ஜெய் எப்படி செட்டில் ஆகிறார்கள், காதல் என்ன ஆனது என்ற கேள்விகளுக்கு ரொம்பவே சுத்தவிட்டுப் பதில் சொல்கிறது 'கலகலப்பு 2'.
சுந்தர்.சியின் படம் என்றால் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாது என்பது தமிழ் சினிமா நல்லுலகம் அறிந்ததே. அதை அவரே அறிவிப்பாகவும் போட்டு படம் பார்ப்பதற்கு நம்மைத் தயார்படுத்துவதுதான் சிறப்பு.
வழக்கமான சுந்தர்.சி. படங்களில் இருக்கும் நாயகர்களுக்கான வேலைகள் ஜீவாவுக்கும், ஜெய்க்கும் படத்தில் தவறாமல் இடம் பிடிக்கின்றன. நடிப்பு, நடனம் என்று அதி உற்சாகமாகக் களம் இறங்கி காரியம் சாதிக்கிறார் ஜீவா. சோகமயமான சூழலில் தன்னை வெளிப்படுத்தும்போதும், காதலின் தவிப்பையும், அழுகையையும் மிகச் சரியாக கையாளுகிறார் ஜெய்.
இரண்டாம் பாதியில் லீட் எடுத்து வந்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்து அசத்துகிறார் சிவா. கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் நாயகிக்கான வேலையைக் கச்சிதமாக செய்கிறார்கள். பாடல் காட்சிகளில் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.
சாமியாராகத்தான் போவேன் என்று அடம்பிடிக்கும் சதீஷ். மேன்ஷனில் வேலை பார்க்கும் சிங்கம்புலி, சிவாவைத் தத்தெடுத்தே தீருவேன் என்று உறுதியாய் நிற்கும் சந்தானபாரதி, அதைத் தடுக்க முயலும் ரோபோ ஷங்கர், மகள் காதலுக்கு குறுக்கே நிற்கும் விடிவி கணேஷ், திருட்டு வேலைக்கு துணை போகும் மனோபாலா மற்றும் நிஷா, இமேஜ் பார்க்காமல் இன்ஸ்பெக்டராக இறங்கி வந்து அடிவாங்கும் ராதாரவி, அமாவாசை என்றாலே வெறியாட்டம் ஆடும் ஜார்ஜ், எடுபிடியாக வந்து போகும் வையாபுரி, மதுசூதனராவ் வீட்டில் அடியாட்களாக உலா வரும் விச்சு விஸ்வநாத், தளபதி தினேஷ் அண்ட் கோ, ஆடிட்டராக வந்து நினைவு தப்பியவராக அலப்பறை கூட்டும் ராமதாஸ், போலி சிபிஐ அதிகாரியாக வந்து ஏமாற்றும் நந்திதா ஸ்வேதா என படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள்.
யாரும் எந்தக் குற்றம், குறையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே என்னவோ ஒவ்வொருவருக்கும் ஒரு சீனிலாவது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் உள்ளேன் ஐயா என்று அட்டனென்ஸ் போட்டுவிட்டு சிரிக்க வைத்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனாலும் அதில் அதிக அப்ளாஸ் அள்ளுவது யோகி பாபு- சிங்கமுத்து கூட்டணிதான். நகைச்சுவையில் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் காசியை அழகாகக் படம்பிடித்து கண்களுக்குள் கடத்துகிறார். ஹிப் ஹாப் தமிழாவின் இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஸ்ரீகாந்த் இன்னும் சில இடங்களில் கச்சிதமாகக் கத்தரி போட்டிருக்கலாம்.
முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகம், பாடல் என்று வண்ணமயமாய் நகர்வதற்கு சுந்தர்.சி. மெனக்கெட்டிருக்கிறார். அதனால் படம் போர் அடிக்காமல் செல்கிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார். பார்த்துப் பழகிய சேஸிங் காட்சிகள், ஆள் மாற்றித் தூக்குவது என்று பழகிய ஃபார்முலாவுக்குள்ளேயே நம்மைப் பயணிக்க வைக்கிறார் இயக்குநர். அது ஓரளவே எடுபடுகிறது. வருமான வரி ரெய்டில் நடக்கும் பித்தலாட்டங்கள், போலிச் சாமியாரின் நடவடிக்கைகள் என்று துணிந்து கலாய்த்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஆனால், காஜல் பசுபதி குறித்து முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு கமெண்ட் இடம் பெறச் செய்ததற்கு பலத்த கண்டனங்கள். ஆங்காங்கே சிரிக்க வைத்துவிட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, இயக்குநர் அரை மணிநேரத்துக்கும் மேலாக கிளைமாக்ஸை இழுத்து வைத்து அலுப்பை ஏற்படுத்துகிறார். அதுவும் அந்த ஐட்டம் பாடலை வேறு திணித்து திசை தெரியாமல் போகிற போக்கில் செல்கிறது திரைக்கதை.
சுந்தர்.சி படம் என்றால் சிரிப்பு இல்லாமலா என்று நம்பிப் போகிறவர்களும், நகைச்சுவைக் காட்சி வருவதற்கு முன்பாகவே சிரிக்கத் தயாராக இருப்பவர்களும் 'கலகலப்பு 2'வில் கலந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT