Published : 27 Dec 2013 10:26 AM
Last Updated : 27 Dec 2013 10:26 AM
தமிழ் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கக் காரணம், திறமை மிக்க கலைஞர்கள் புதிது புதிதாக உருவாவதுதான். அது வாரிசாக இருந்தாலும் சரி, சினிமா பின்புலம் இல்லாதவராக இருந்தாலும் சரி, திரை வானில் ஜொலிக்க மிகவும் மெனக்கெட வேண்டும். அப்படி மெனக்கெட்டு நடித்து, ரசிகர்கள் மத்தியில் இந்தாண்டு ஜொலித்த புதிய நட்சத்திரங்கள் சிலரைப் பார்ப்போம்.
சிவ கார்த்திகேயன்:
பெரிய திரையில் ஜொலித்து ரிட்டயர்மென்ட் ஆன பிறகு சின்னத்திரை பற்றி நினைக்கும் நட்சத்திரங்களின் எண்ணத்தைச் சிதறடித்தவர் சிவ கார்த்திகேயன். மிமிக்ரி கலைஞராகத் தோன்றிய தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, இன்று பெரிய திரையில் வெற்றிக்கொடி கட்டியவர் இந்த நாயகன்.
கடந்த ஆண்டு மெரினா படத்தில் அறிமுகமானபோது பத்தோடு பதினொன்று என நினைத்தவர்கள்கூட, இன்று அவரது பயணம் ஏறுமுகமாக இருப்பதைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். ஓர் ஆண்டில் ஒரு வெற்றிப் படம் கொடுக்கவே நட்சத்திரங்கள் மல்லுக்கட்டும் இந்தக் காலகட்டத்தில் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்து அமைதியாகப் பயணிக்கிறார் இந்த நாயகன்.
காமெடி என்ற பலத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த சிவ கார்த்திகேயன், அந்த இமேஜில் இருந்து வெளிவர மெனக்கெடுவதும் இப்போது தெரிகிறது. அது அவருக்குச் சாதகமாகப் பாதகமா என்பது போகப் போகத்தான் தெரியவரும். ‘மான் கராத்தே’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘அந்த ஒண்ணுதான் இது’ என அடுத்த ஆண்டிலும் நிறையப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவ கார்த்திகேயன், இந்த ஆண்டில் பிரகாசித்த கலைஞனாக மின்னுகிறார்.
விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் இப்போது பிசியான நடிகர் யார் தெரியுமா? விஜய் சேதுபதிதான். ‘சுந்தர பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ எனத் தொடர்ச்சியாக ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு நல்ல உதாரணம் விஜய் சேதுபதி. 2010ஆம் ஆண்டில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர். அந்த அனுபவத்தையே களமாக அமைத்துக்கொண்டு வேகமாக முன்னேறிவருகிறார். தற்போது பாப்புலராக உள்ள இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், விஜய் சேதுபதி மட்டும் விதிவிலக்காகச் செயல்படுகிறார். சீனியர் இயக்குநர்களின் இணை, துணை மற்றும் குறும்படங்களின் இயக்குநர்கள்தான் இவரது தேர்வு.
முன்னணி ஹீரோக்களுடன் இரட்டையர்களில் ஒருவராகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்துவருகிறார்.
விக்ரம் பிரபு:
நடிகர் திலகத்தின் பேரன், இளைய திலகத்தின் மகன் என்ற முத்திரையோடு சினிமாவுக்குள் நுழைந்த விக்ரம் பிரபு, தாத்தா, அப்பாவின் பெயரைக் காப்பாற்றத் தவறவில்லை. தாத்தாவைப் போலவே பேரன் விக்ரம் பிரபுவுக்கு முதல் படமான ‘கும்கி’ வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, சிறந்த இயக்கம், வருடும் இசை எனச் சம விகிதத்தில் கலந்த ‘கும்கி’யில் யானைப் பாகன் பொம்மனாக மிளிர்ந்தார் விக்ரம் பிரபு.
‘கும்கி’ வெற்றி அவருக்கு யானை பலம் கொடுத்தது. சரியாக ஓராண்டு கழித்து வேற மாதிரியாக வந்திருக்கிறார் விக்ரம் பிரபு. சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த கலவரத்தை மையமாகக் கொண்ட கதையில் உள்ளார்ந்த கோபத்தை வலுவாகச் சித்தரித்திருக்கிறார் விக்ரம். இந்தப் படமும் இவருக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.
அடுத்த கட்டமாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற ரீமேக் படத்தில் இறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு. விஜயகாந்துக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த இந்தப் படம் விக்ரம் பிரபுவுக்கும் பெயர் கொடுக்கலாம்.
லட்சுமி மேனன் :
கோடம்பாக்கத்தில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் லட்சுமி மேனன். பாவாடை, தாவணியைத் தமிழ்நாட்டு இளம் பெண்களே மறந்துவிட்ட இந்தக் காலத்தில் பாவாடை, தாவணியில் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் லட்சுமி.
அறிமுகப் படம் வெற்றி பெற்றாலே தலை கால் புரியாத திரையுலகில் வரிசையாக ‘சுந்தர பாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ என நான்கு வெற்றி படங்களில் நடித்தும் அலட்டிக்கொள்ளாத நடிகை லட்சுமி மேனன். இந்த ஆண்டில் மட்டும் இரு வெற்றிப் படங்கள். தொடர்ந்து ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘சிப்பி’, ‘வசந்தகுமாரன்’ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளன.
கிளாமர் எனும் ஆயுதத்தை ஏந்தாமல் இருப்பது, பெண்கள் மத்தியிலும் லட்சுமிக்கு ரசிகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நடிப்புக்கு இடையேயும் பள்ளிப் படிப்பைத் தொடரும் நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சியளிக்கிறார்.
நஸ்ரியா நஸீம்:
நடிகர் சிவ கார்த்திகேயன் போலச் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நஸ்ரியா. அழகும் திறமையும் உள்ள நடிகை. மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ்ப் படமான ‘நேரம்’தான் இவருக்குப் பட வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
‘நேரம்’ நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள நாயகியாக நஸ்ரியாவை அடையாளம் காட்டியது. அடுத்த படமான ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுக்கு இணையாக இவரது நடிப்பும் பேசப்பட்டது. தனுஷுடன் நடித்த நய்யாண்டி படம் சரியாகப் போகாவிட்டாலும், இவருக்கான வாய்ப்புகளில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. ஜெய்யுடன் இவர் நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகளில் சிக்கினாலும் ‘நீ நல்லா வருவடா’, ‘வாய் மூடி பேசவும்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே இருக்கிறார் நஸ்ரியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT