Published : 15 Feb 2024 12:00 PM
Last Updated : 15 Feb 2024 12:00 PM
துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயில் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக உள்ளதாக கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று (பிப்.14) திறந்துவைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல், திரைப் பிரபலங்கள் கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது ஒரு மிகச்சிறந்த அனுபவம். இந்த கோயில் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக உள்ளது. இதை சாத்தியமாக்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நம் கலாச்சாரத்தின் அற்புதமான சான்று. இது அனைத்து மதத்தினருக்கான ஒரு கோயில். அது இந்த கோயிலின் கட்டுமானத்திலும் பிரதிபலிக்கிறது. பயணிகளுக்கும், இந்தியர்களுக்கும் இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மற்றும் கத்தார் சென்றுள்ளார். நேற்று மாலை அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் இந்த சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த சுவாமி நாராயண்கோயில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கற்கள் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கற்கள் ஆகியவை இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2015ஆம் ஆண்டு அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 27 ஏக்கர் நிலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT