Published : 14 Feb 2024 08:11 PM
Last Updated : 14 Feb 2024 08:11 PM
சென்னை: “எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு” என இயக்குநர் வெற்றிமாறன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி சினிமா தொடர்பான இடங்களில் தன்னை அறிமுகப்படுத்தும்போது, என்னுடைய மாணவர் என்று தான் அறிமுகம் செய்வார். என்னிடம் தான் சினிமா கற்றுக்கொண்டேன் என்பார். உண்மையில் நான் தான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு நிறைய விஷயங்களை அவர் சொல்லிக்கொடுத்தார். எங்கள் இருவருக்கும், பறவை, விலங்குகள் தொடர்பாக பொதுவான ஆர்வம் உண்டு. இதற்கான தேடல், பயணங்களில் ஆர்வம் கொண்டவர் வெற்றி. சிறந்த ‘WildLifePhotographer’-க்கான விருதுகளையும் வாங்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சி தான் அவரின் சமீபத்திய பயணமும். பயணங்களில் ஆர்வம் கொண்ட சிறந்த புகைப்படக்காரர். கடந்த 10 ஆண்டுகளாக நான் என்ன செய்தாலும் அவரின் பங்களிப்பு அதில் ஏதேனும் ஒருவகையில் இருக்கும். அதனுடைய உச்சமாக தான் ஐஐஎஃப்சி என்ற பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு இடம் கொடுத்தார். அவர் முன்வரவில்லை என்றால் இன்னும் எத்தனை காலம் ஆகியிருக்கும் என தெரியவில்லை. யாருக்கும் இந்த மனது வராது. எப்போதும் உதவும் மனப்பான்மை உடையவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும். தொடர்ந்து தனது தந்தையின் மனித நேய அறக்கட்டளையில் இயங்கிக் கொண்டிருந்தவர்.
எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. மனம் ஏற்க மறுக்கிறது. காலம் அடிக்கடி இப்படியான சந்தர்பங்களில் நம்மை நிறுத்திவிடுகிறது. வெற்றி துரைசாமி இரண்டாவது படத்துக்கு வேலை செய்துகொண்டிருந்தார்.
அவரின் நினைவாக, ஐஐஎஃப்சி சார்பாக முதல் திரைப்படம் இயக்குபவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கலாம் என பேசிக்கொண்டிருக்கிறோம். அவரின் பெயரில் WildLifePhotographer-க்கும் விருது வழங்கலாம் என்ற எண்ணம் உள்ளது. வாழ்க்கையில் நாம் நிறைய பேரை சந்திக்கிறோம். பேசுகிறோம். கடந்து போகிறோம். ஆனால், சிலரின் மறைவு தான் நம்மிடமிருந்து நம்மை எடுத்துச் சென்றுவிடுகிறது. அப்படி ஒன்றுதான் என்க்கு வெற்றி துரைசாமியின் மறைவு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT