Published : 20 Feb 2018 09:07 AM
Last Updated : 20 Feb 2018 09:07 AM
ச
ன் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடர் கடந்த வாரத் தோடு நிறைவுபெற்று அதே நேரத்தில் ‘நாயகி’ என்ற புதிய சீரியலை இயக்கத் தொடங்கியிருக்கிறார் குமரன்.
‘திருமதி செல்வம்’, ‘தென்றல்’ ஆகியவற்றை தொடர்ந்து ‘தெய்வமகள்’ சீரியல் தந்த அனுபவம், தற்போது ‘நாயகி’ தொடர் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து அவர் கூறியதாவது:
முன்பெல்லாம் சீரியல் என்றால் ‘திங்கள் முதல் வெள்ளி வரை’ 5 நாட்கள்தான் வரும். ஒரு நாளுக்கு 20 நிமிட அத்தியாயம் நகரும். கடந்த 3 ஆண்டுகளாக ‘திங்கள் முதல் சனி வரை’ என பெரும்பாலான சீரியல்கள் 6 நாட்களாகிவிட்டன. ஒரு நாளுக்கு 21 நிமிட அத்தியாயம் நகர்கிறது. அதனால், பரபரப்பாக ஓட ஆரம்பித்தோம். சற்று கடினமான ஓட்டம்தான். இருந்தாலும், ‘இதுதான் நம் வேலை, கடமை’ என்ற எண்ணத்தோடு ஓடியதால் தொய்வின்றி ஆரோக்கியமாகவே ஓடுகிறோம்.
இடைவெளியின்றி தொடர்ச்சியாக 4-வது சீரியல். இந்தப் பயணம் பற்றி?
சீரியலுக்கு திரைக்கதை மிக முக்கியம். ‘திருமதி செல்வம்’ திரைக்கதை ஆக்கத்தின்போது அமிர்தராஜ் என்னுடன் இருந்தார். ‘தென்றல்’ இயக்கும்போது குரு சம்பத்குமார், முத்துச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். மீண்டும் ‘தெய்வமகள்’ வந்ததும் அமிர்தராஜ் வந்தார். இப்போது ‘நாயகி’க்கும் அவர் உடன் இருக்கிறார். நல்ல அலைவரிசை கொண்ட நண்பர்கள் இருக்கும்போது நல்லதுதானே நடக்கும். தயாரிப்பு நிறுவனம், டிவி சேனல், ரைட்டர், இயக்குநர் இடையே நல்ல புரிதல், நம்பிக்கை இருப்பதால் தான் தொடர்களில் தொடர் வெற்றி கொடுக்க முடிகிறது.
ஒரு சீரியல் தொடர்ச்சியாக பல அத்தியாயங்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென புதிய கோணத்தில் ஒரு புது சீரியல் வருவதால், பழைய சீரியல் பாதிக்கப்படுமா?
அதை நாங்கள் எப்போதுமே மூளைக்குள் ஏற்றிக்கொள்வதில்லை. புதிய சீரியல்கள் வந்தால், பார்வையாளர்கள் அதையும்தான் பார்க்கட்டுமே. நம் சீரியல்களுக்கென்று ஒரு பார்வையாளர்கள் இருப்பார்கள். எவ்வளவுதான் புதிதாக வந்தாலும் அவர்கள் மாறமாட்டார்கள். எங்குமே போட்டி இருக்க வேண்டும். அப்போதுதான் வேலை சுவாரசியமாக இருக்கும்.
‘நாயகி’ என்னமாதிரியான அவதாரம்?
விவசாயம் முதல் மல்யுத்தம் வரை பெண்களின் பங்களிப்பும், உழைப்பும் தனித்துவமானது. ஆனால் அவர்களை நாம் கொண்டாடுவது இல்லை. ‘சென்னை மெரினா உழைப்பாளர் சிலையில் ஏன் ஒரு பெண் சிலையை வைக்கவில்லை?’ என்ற கேள்வியை ‘நாயகி’ தொடரின் டிரெய்லரில்கூட எழுப்பியுள்ளோம். இதில் நாயகியாக விஜயலட்சுமி நடிக்கிறார். சின்னத்திரை தொடர் நாயகி என்றாலே எமோஷன் அதிகம் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தத் தொடரில் அதையும் கடந்து பல விறுவிறுப்பான விஷயங்களில் அவர் ஈடுபடுவார். நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த திலீப் இதில் அறிமுக ஹீரோவாக களம் இறங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT