Published : 11 Feb 2024 08:03 AM
Last Updated : 11 Feb 2024 08:03 AM

திரை விமர்சனம்: லால் சலாம்

இந்துகளும் இஸ்லாமியர்களும் அண்ணன் - தம்பிகளாக பழகும்கிராமத்தில் இருந்து மும்பை சென்று தொழிலதிபராக இருக்கிறார் மொய்தீன் பாய் (ரஜினி). இவர் மகன் சம்சுதீன் (விக்ராந்த்) ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முயற்சித்து வருகிறார். ரஜினியின் நண்பர் (லிவிங்ஸ்டன்) மகன் திருநாவுக்கரசு (விஷ்ணு விஷால்) கிராமத்தில் கிரிக்கெட் அணியை நடத்தி வெற்றி குவிக்கிறார்.அவரை வீழ்த்த நடக்கும் சதியால், கிரிக்கெட்தொடரில் மதக்கலவரம் மூள்கிறது. இதனால் அவரை ஊரே வெறுக்க, உள்ளூர் அரசியல்வாதியின் தூண்டுதலால் கோயில் தேர்த் திருவிழாவும் தடைபடுகிறது. அதை முறியடித்து ஊரில் நல்ல பெயரெடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். இந்த எல்லா விஷயங்களிலும் அங்கமாக இருக்கும் ரஜினி, மதநல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்பட என்ன செய்கிறார் என்பது படத்தின் மீதிக் கதை.

எல்லாக் காலத்திலும் தேவையான மதநல்லிணக்கப் பின்னணி உள்ள ஒருகதைக் களத்தை, படமாக இயக்கி இருக்கும் ஐஸ்வர்யாரஜினிகாந்தைப் பாராட்டலாம். மக்களின் வாக்குகளைப் பெற அரசியல்வாதிகள் என்னென்ன அரசியலை செய்கின்றனர், ஒரு விஷயத்தை எப்படி ஊதி பெரிதாக்குகின்றனர் என்பதை கச்சிதமாகவே படமாக்கி இருக்கிறார். கதைக் களம் 1993-ல் நடப்பதால், அந்தச் சூழலில் நடந்த விஷயங்களையும் கதைக்குப் பயன்படுத்தி இருப்பது நல்ல உத்தி. ரஜினி சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வருகிறார். ஒரு கிராமத்தில் நடக்கும் தேர்த் திருவிழா என்பது பண்டிகைக்கு நிகரான விழா என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பது சலாம் போட வைக்கிறது.

ரஜினி படத்துக்குரிய அம்சங்களுடன் இருந்தாலும் குழப்பமான, இழுவையான திரைக்கதை படத்துக்கு மைனஸ். இதுகிரிக்கெட் தொடர்பான படமா, தேர்த் திருவிழா படமா என்கிற குழப்பம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கிரிக்கெட் காட்சிகளும்கூட எந்தப் பரபரப்பும் இல்லாமல் நகர்வது சோர்வடைய செய்கிறது. ரஞ்சிபோட்டியில் விளையாடும் அளவில் உள்ள விக்ராந்த், கிராமத்தில் நடக்கும் தொடரில் விளையாட வருவதான காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. விஷ்ணு - விக்ராந்த் மோதலுக்கு வலுவான காரணங்களைச் சொல்லி இருக்கலாம். ஒரு கிராமத்து கிரிக்கெட்டில் மதரீதியாக 2 அணிகள் இருப்பது போன்ற காட்சிகள் இயக்குநரின் அதீத கற்பனை. முன்னும் பின்னுமாக மாறி மாறி வரும் திரைக்கதை தொடர்ச்சியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொய்தீன் பாயாக வரும் ரஜினி படத்தைமுழுமையாகத் தாங்கிப் பிடிக்கிறார். முதல் காட்சியிலேயே மாஸ் என்ட்ரிதான். மதநல்லிணக்கம் பேசும் இடங்களில் கண்டிப்பது, மகனுக்கு ரஞ்சி அணியில் இடம் கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளுவது, மகனின் எதிர்காலம் பாழாய்போகும் இடத்தில் உருகுவது என எல்லா இடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் வரும் விஷ்ணு விஷால் ஒன்று கிரிக்கெட் விளையாடுகிறார், இல்லை வம்பு செய்கிறார். விக்ராந்த் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகி அனந்திகாவுக்கு எந்தமுக்கியத்துவமும் இல்லை. பூசாரி செந்தில், விஷ்ணுவின் மாமா தம்பி ராமையா, அரசியல்வாதியாகவும் வில்லனாகவும் வரும் விவேக் பிரசன்னா, போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் நடிப்பில் கவர்கிறார்கள்.

விஷ்ணுவின் அம்மாவாக வரும் ஜீவிதாஎப்போதும் அழுது வடிகிறார். கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கவுரவ வேடத்தில்தோன்றுகிறார். நிரோஷா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு ராமசாமி ஒளிப்பதிவில் குறையில்லை. பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குறைகள் இருந்தாலும் மதநல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேசும் படம் என்பதால் ‘லால் சலா’மை வரவேற்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x