Published : 09 Feb 2024 08:40 PM
Last Updated : 09 Feb 2024 08:40 PM
சென்னை: “குளிர்பான விளம்பரங்களில் நடிக்கமாட்டேன். நிறைய தடவை கேட்டும் பண்ணவில்லை. சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளத்துடன் அழைப்பு வந்தது. பண்ணமாட்டேன் என கூறிவிட்டேன்” என இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இடையே வாய்ப்பு குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ள பிரத்யேகமாக ‘ஸ்டார் டா’ என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், “எனக்கு எப்போதும் புதுமுகங்களுடன் பணியாற்றுவது மிகவும் பிடிக்கும். வெற்றிமாறன், அட்லீ, ஏ.எல்.விஜய் என நிறைய அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.
என் நடிப்பில் இதுவரை 23 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் 17 படங்கள் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துள்ளேன். நாம் எதனை விளம்பரப்படுத்துகிறோம் என்பதில் உள்ளது. குளிர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நிறைய தடவை கேட்டும் பண்ணவில்லை. சூதாட்ட விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்துடன் அழைப்பு வந்தது. பண்ணமாட்டேன் என கூறிவிட்டேன். ஆனால், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றி இருக்கிறேன்.
தற்போது இந்த செயலியின் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்று இருப்பதற்கும் மகிழ்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவுக்கு வர விரும்புவர்களுக்கு எங்கு செல்வது, யாரை பார்ப்பது போன்ற கேள்விகள் அவர்களுக்குள் இருக்கும். அதற்கெல்லாம் இந்த செயலி பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் என்னுடைய படங்களுக்கும் இந்த செயலி மூலமே நடிகர்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT