Published : 09 Feb 2024 03:21 PM
Last Updated : 09 Feb 2024 03:21 PM

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே எலியும் புலியுமாக இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகிவந்த இந்து - முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதை பேசுகிறது ‘லால் சலாம்’.

மதங்களை முன்னிறுத்தி விவாதங்கள் தொடர்ந்து எழும் சூழலில் இப்படியொரு கதைக்களத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மனதார பாராட்டலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன் என பிரச்சார நெடியுடன் வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் முக்கியமான கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் - விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் நான்-லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. கலவரத்தைத் தொடர்ந்து சிறைக்கு சென்று வெளியே வரும் விஷ்ணு விஷால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடையில் ஒரு காதல் பாட்டு என சற்றே தொய்வுடன் தொடங்கும் படம், ரஜினியின் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடிக்கிறது.

சமீப வருடங்களில் வெளியான ரஜினி படங்களையே தூக்கி சாப்பிடும்படியாக ரஜினிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி. கூடவே ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் செம விருந்து. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு.

ஷார்ப் ஆன வசனங்கள், வயதுக்கு ஏற்ற பக்குவமான கேரக்டர் என தன்னுடைய திரை ஆளுமையால் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். சிறப்புத் தோற்றம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஏறக்குறைய முழு படத்திலும் ரஜினியின் ஆதிக்கம்தான். மதநல்லிணக்கம் தொடர்பாக ரஜினி பேசும் வசனங்கள் அனைத்துக்கும் அரங்கம் அதிர்கிறது. குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்து பேசுவது, இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் ரஜினி பேசுவது ஆகிய காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் ரகம்.

படத்தின் பிரச்சினையே முதல் பாதி நான்-லீனியரில் சொல்லப்படுவதுதான். நிகழ்காலம், கடந்த காலம் இரண்டுமே ஆறு மாத இடைவெளியில் நடப்பவை என்பதால் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. போரடிக்காத வகையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்தாலும் இலக்கில்லாத வகையில் எங்கெங்கோ செல்வதால் எந்த இடத்திலும் படத்துடன் ஒன்றமுடியாத நிலை ஏற்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் கதைக்களம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படத்தில் மிகச் சிறிய அளவே கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றிலுமே எந்தவித பரபரப்போ, அழுத்தமோ இல்லை. படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா அல்லது கிரிக்கெட்டா என்று தெளிவாக சொல்லமுடியாமல் தடுமாறியுள்ளனர். எடிட்டிங்கில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன.

ரஜினி தவிர்த்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வரும் அனந்திகா சனில்குமார் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் உதவியிருக்கிறார். படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்று சொல்லப்பட்ட தன்யா பாலகிருஷ்ணாவின் காட்சிகள் பெரிதாக இல்லை (வெட்டப்பட்டனவோ?) சமூக வலைதள சர்ச்சை காரணமா என்று தெரியவில்லை. இறுதிக் காட்சியில் ஓரிரு நிமிடங்கள் வந்தாலும் ஈர்க்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதயத்தை உருக வைக்கிறது. தேர்த் திருவிழா பாடல், மறைந்த ஷாஹுல் ஹமீதுவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருக்கும் ஒரு பாடல் ஆகியவை சிறப்பு.

படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன. குறிப்பாக, செந்தில் தனது மகன் குடும்பத்தை பற்றி பேசும் காட்சி, மருத்துவமனையில் இருக்கும் தனது மகனை நினைத்து ரஜினி ‘அல்லாஹ்’ என்று கதறி அழும் காட்சி ஆகியவை நெகிழச் செய்கின்றன.

சமூக வலைதளங்களில் மதங்களை முன்வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசும் வன்மக் கணைகளுக்கு நடுவே ஒரு முக்கிய கருத்தை, ரஜினி என்ற ‘பிராண்ட்’ உடன் சுமந்து வந்திருக்கும் ’லால் சலாம்’ படத்தை தாராளமாக வரவேற்கலாம். திரைக்கதையை மெருகேற்றி, காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x