Published : 28 Jan 2024 07:38 AM
Last Updated : 28 Jan 2024 07:38 AM

திரை விமர்சனம்: சிங்கப்பூர் சலூன்

தென்காசியில் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற கடை வைத்திருக்கும் சாச்சாவைப் (லால்) பார்த்து தானும் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் கதிர் (ஆர்ஜே பாலாஜி). படித்து முடித்த பிறகு தன் லட்சியத்தை அடைய மாமனாரின் (சத்யராஜ்) பணத்தைப் பெற்றும் கடனை வாங்கியும் சென்னையில் சலூன் கடைத் திறக்கிறார். ஆனால், எதிர்பாராத திருப்பத்தால் கடையைத் திறக்க முடியாமல் போகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு முடிவெடுக்கும் பாலாஜி, பிறகு அதிலிருந்து மீண்டு, எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படத்தின் கதை.

தென்காசியிலிருந்து தொடங்கும் கதையில் முதல் பாதி கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வது படத்துக்கு பிளஸ். சிறு வயதில் ஹேர் ஸ்டைலிஸ்டாக வேண்டும் என்கிற ஆசை பாலாஜிக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்காகக் குறிப்பிட்ட நேரத்தையும் எடுத்துக் கொள்கிறார் இயக்குநர் கோகுல். அந்தப் பருவத்துக் கதையைச் சுவையாகவும் வழங்கியிருக்கிறார். ஹேர் ஸ்டைலிஸ்ட் வேலையை, குறிப்பிட்டவர்கள்தான் செய்ய வேண்டும் என்றல்ல; யாரும் செய்யலாம் என்கிற சமூக ரீதியிலான கருத்தையும் கச்சிதமாக இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார்.

‘என்ஜினீயரிங் படிப்பது குலத்தொழிலா?’ என்கிற வசனம் சுளீர். இடையே சதுப்பு நிலம், பறவைகள் என சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. பட்டதாரி ஆன பிறகும் சிறுவயது கனவை அடைய ஏற்படும் இடைஞ்சல்களைக் களைந்து சாதிக்கும் ஓர் இளைஞனின் கதை என்ற வகையில் படத்தின் ஒன்லைன் ஓ.கே.தான். ஆனால், முதல் பாதியில் கதையின் மீது ஏற்படும் எதிர்பார்ப்புகள், இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு மழையால் ஏற்படும் திருப்பம், கதையில் சுவாரசியத்தைக் கூட்டினாலும் அடுத்தடுத்தக் காட்சி நகர்வுகள் திரைக்கதைக்கு வேகத்தடையாகி விடுகின்றன. கடவுள் போல திடீரென தோன்றி மறையும் அரவிந்த்சாமியால், அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை ஊகிக்க முடிகிறது.

என்றாலும் தானே பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வந்து வெற்றி பெறுவது என்ற குழப்பத்தில் நாயகன் இருக்கும்போது, ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் குடிசைப் பகுதி இளைஞர்களின் இலக்கை அடைய, நாயகன் இறங்குவதில் லாஜிக் மிஸ்ஸிங். தன்னுடைய வெற்றியை மடைமாற்றும் காட்சி அமைப்புகளால் பிரதானக் கதைக்குச் சேதம் ஏற்பட்டு விடுகிறது.

படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். காமெடி என்கிற பலத்தை மட்டும் நம்பாமல் தேவையான விகிதத்தில் நடிப்பையும் வழங்கி கவர்கிறார். நாயகியாக மீனாட்சி சவுத்ரி வந்துபோகிறார். பாலாஜியின் மாமனாராக வரும் சத்யராஜ், கஞ்சராக வந்து படத்தில் அடிக்கும் லூட்டிகள் கதையோட்டத்துக்கு வலு சேர்க்கின்றன.

சிறந்த நடிகரான லாலை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். ரோபோ சங்கர் தன் பங்குக்குக் கலகலப்பூட்டுகிறார். ‘தலைவாசல்’ விஜய், ஜான் விஜய், , ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். சுரேஷ்மேனன், அரவிந்த்சாமி, ஜீவா, லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் படத்தில் வந்து செல்கிறார்கள்.

விவேக் - மெர்வின் - ஜாவேத் ரியாஷின் இசையில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா தென்காசி, சென்னையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. விறுவிறுப்பில்லாமல் நீளும் இரண்டாம் பாதியில் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. கத்திரி போட்டிருக்கலாம். திரைக் கதையை அழகாகத் திருத்தியிருந்தால் சிங்கப்பூர் சலூன் ஜொலித்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x