Published : 26 Jan 2024 01:40 PM
Last Updated : 26 Jan 2024 01:40 PM

நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்!

மணிரத்னம் - இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, பவதாரிணி ஆகியோர்தான் அந்த மழலைப்பட்டாள கோரஸ் சிங்கர்ஸ். அஞ்சலி படத்தின் ஆடியோ கேசட் கவரில் பின்னணி பாடியவர்கள் என இந்த பெயர்கள் இருக்கும். அப்படித்தான் அறிமுகமானது 'பவதாரிணி' என்ற பெயர்.

மேலும் அப்போது வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தின் பாடல்கள் வரும். அந்தப் படத்தில் இருந்து அதிகமாக ஒளிபரப்பாகும் பாடல்களில் ஒன்று 'காதல் வானிலே', மற்றொரு பாடல் 'மஸ்தானா மஸ்தானா' , ராஜாவின் வெஸ்டர்ன் இசைக்கு ஏற்ப இரண்டு மூன்று மொட்டைத்தலை ஆட்களோடு பிரபுதேவா நடனமாடும் அந்தப்பாடல் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது. ராஜாவின் குழலிசைக் கலைஞர் அருண்மொழியுடன் இணைந்து பவதாரிணி தான் இந்தப் பாடலை பாடியிருப்பார். மழலை மணமாறாத பவதாரிணியின் சன்னமான குரலோசை, அருண்மொழியின் பேஸ் டோனோடு சேர்ந்து பாடலை இனிமையாக்கியிருக்கும்.

ராசய்யா 1995-ல் வெளியானது, அதிலிருந்து இரண்டு ஆண்டுகள் 1997-ல் காதலுக்கு மரியாதை வெளியாகிறது. பவதாரிணியின் டைட்டில் பாடலுடன்தான் படமே தொடங்கும். அஞ்சலி, ராசய்யாவுடன் ஒப்பிட்டுக் கேட்டால், காதலுக்கு மரியாதை படத்தில் வந்த ‘இது சங்கீத திருநாளோ’ பாடலில் பவதாரிணியின் குரலில் ஒரு முதிர்ச்சி இருக்கும். சரணங்களின் தொடக்க வரிகள், இவள்தானே நம் தேவதை, எப்போதும் தாலாட்டுவேன் என்றும் சரணங்களை முடிக்கும் இடங்களிலும் பிரமாதம் செய்திருப்பார்.

ஆகச்சிறந்த இசையையும், பாடல்களையும் படைப்பதைத் தாண்டி, ராஜாவின் மற்றொரு தனிச்சிறப்பு கதைக்கு ஏற்ப வரப்போகும் பாடல்களுக்கு மிக பொருத்தமான குரல்களை தேர்வு செய்வதுதான். அந்த வகையில் பாவதாரிணியின் குரலை மிக நேர்த்தியாகப் பொருந்திபோயிருந்த பாடல்தான் பாரதி படத்தில் வந்த ‘மயில் போல பொன்னு’ பாடல். இப்பாடல் பவதாரிணிக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. பின்னர், பவதாரிணி தொடர்ந்து தனது தந்தை இளையராஜா, அண்ணன் கார்த்திக்ராஜா மற்றும் தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல பாடல்களை பாடினார். சில திரைப்படங்களுக்கு அவரும் இசையமைத்தார்.

2000-ல் விருது வாங்கிய பவதாரிணியின் குரலை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பாடலாக அமைந்தது 2002-ல் வெளிவந்த அழகி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடல். பாடகர் கார்த்திக் உடன் இளையராஜாவின் இசையில் வந்த அப்பாடல் இன்றுவரை, பலருக்கு மனதின் இருளை அகற்றும் விளக்காய் நில்லாமல் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. அதேபோல், கார்த்திக் உடன் இணைந்து சொல்ல மறந்த கதை படத்தில் வந்த 'ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்' பாடலும், பவதாரிணியின் நினைவுகளை எப்போதும் சுமந்துக் கொண்டே இருப்பவை.

உன்னிகிருஷ்ணன் உடன் இணைந்து செந்தூரம் படத்தில் ஆலமரம் மேல வரும் பாடலை பவதாரிணி பாடியிருப்பார். இருவரது குரலில் அந்தப் பாடலை எத்தனை முறைக் கேட்டாலும், சலிக்காது. அதே உன்னிகிருஷ்ணன் உடன் இணைந்து கரிசக்காட்டுப் பூவே திரைப்படத்தில் மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் பாடலும், பவதாரிணியை எப்போதும் நினைவில் கொண்டு வருபவை. ஹரிகரனுடன் அவர் சேர்ந்து பாடிய, தென்றல் வரும் வழியே, தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல்கள் பலரது ஆல்டைம் பேஃவரைட் பட்டியலில் இடம்பெறும் பாடல்கள். ராமன் அப்துல்லா படத்தில் அருண்மொழியுடன் இணைந்து பாடிய என் வீட்டு ஜன்னல் எட்டி பாடலும், கட்டப்பஞ்சாயத்து படத்தில் பிரபல பக்தி இசைப் பாடகர் ஜாலி ஆப்ரஹாம் உடன் இணைந்து பாடிய ஒரு சின்ன மணிக்குயிலு பாடலும் இசைப்பதை நிறுத்திக் கொண்ட பவதாரிணியின் நினைவுகளை காலந்தோறும் கொண்டுவந்து சேர்ப்பவை.

கிழக்கும் மேற்கும் படத்தில் வரும் ‘பூங்காற்றே நீ என்னை தொடலாம்’, அது ஒரு கனாக்காலம் படத்தில் வரும் ’கிளிதட்டு கிளிதட்டு’ போன்ற தனிப்பாடல்களையும் பவதாரிணி ராஜா இசையில் பாடியிருந்தார். அதைவிட, 80,90-களில், ராஜா சில பாடல்களில் ஜானகியின் குரலில் ஒருசில பாடல்களில் வெறும் ஹம்மிங் மட்டும் பாடவைத்திருப்பார். அதுபோல காதலுக்கு மரியாதை படத்தில் ஹோ பேபி பேபி பாடலின் துவக்கத்தில் பவதாரிணி ஒரு ஹம்மிங் பாடியிருப்பார். காதலின் இதமான வலியை மனதுக்குள் கொண்டுச் செல்லும் சுகத்தை அந்த ஹம்மிங்கில் கொடுத்திருக்கும் பவதாரிணியின் குரல். அதேபோல, பொன்னுவீட்டுக்காரன் திரைப்பட்டத்தில் வரும், ’இளைய நிலவே இளைய நிலவே’, பாடலில் வெறும் தநன்னா தான் பாடியிருப்பார் பவதாரிணி, அது பாடலுக்கும், பாடல் கேட்பவர்களுக்கும் இனிதாக அமைந்திருக்கும்.

இவையெல்லாம் திரைப்படங்கள் மூலம் வெளிவந்த பாடல்கள். ஆனால், காதல் சாதி, பூஞ்சோலை படங்களில் பவதாரிணி பாடிய பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். காதல் சாதி படத்தில் மனசே மனசே பாடலும், பூஞ்சோலை படத்தில் யுகேந்திரன் உடன் இணைந்து பாடிய உன் பேரைக் கேட்டாலே பாடலும், அவரது குரலைக் கேட்ட மாத்திரத்தில், பவதாரிணியை மனத்தின்கண் கொண்டு வந்துவிடும். அதேபோல், வெளிவராமல் நின்றுபோன இந்தப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய ‘கானக்குயிலே கண் உறக்கம் போனதடி’ பாடலை பவதாரிணி இணைந்து பாடியிருப்பார். பாடல் கேட்கும்போதெல்லாம், நம் கண் உறக்கமே போய்விடும், சோகத்தின் சங்கீதத்தை அப்பியிருக்கும் அந்தப்பாடல் கேட்கும்போதெல்லாம், பவதாரிணியின் குரல் மனங்களை சுகமாக வலிக்கச் செய்திருக்கும்.

ராஜாக்களின் வீட்டில் மட்டுமே இசைத்துக் கொண்டே இருந்ததாலோ என்னவோ, ராஜா மகளின் குரலுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் போதுமான அளவு கொண்டாடப்படவில்லை என்ற குறை பலருக்கும் இருக்கவே செய்கிறது. இரக்கமற்ற காலனது கணக்கின்படி பவதாரிணியின் குரலில் இனி பாடல்கள் வராமல் இருக்கலாம். இளையராஜா, யுவன், கார்த்திக் ராஜா இசையில் அவர் ஏற்கெனவே பாடிவிட்டுச் சென்றிருக்கும் பாடல்களை கேட்கும்போதெல்லாம், சலனமான மனங்களை இதமாக அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x