Published : 25 Jan 2024 04:58 PM
Last Updated : 25 Jan 2024 04:58 PM

மானநஷ்ட வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தன்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த பாபி சிம்ஹா மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவரது நண்பர் தாக்கல் செய்த வழக்கில், பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், நடிகர் பாபி சிம்ஹா மீது ஆலந்தூரைச் சேர்ந்த ஜே.எம்.ஏ. உசேன் என்பவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், பாபி சிம்ஹாவும் நானும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தோம். சிறு வயது முதல் இருவரும் நண்பர்கள். என்னுடைய சகோதரர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு, ஜமீர் காசிம் என்பவர் அறிமுகம் ஆனார். ஜமீர் காசிம் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் மூலம் கொடைக்கானலில் வீடு கட்ட பாபி சிம்ஹா முடிவு செய்தார். இருவரும் ஆலோசனை செய்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கட்டுமான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதன்படி 90 சதவீத கட்டுமான பணி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்துவிட்டது. ஆனால் கட்டுமானத்துக்கு செலவான 90 சதவீதம் தொகையை பாபி சிம்ஹா வழங்கவில்லை. பலமுறை கேட்டும் இழுத்தடித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து என் தந்தை இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார். அப்போது 77 வயது முதியவர் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல் பாபி சிம்ஹா என் தந்தையை மிரட்டினார் அவதூறாகவும் பேசினார்.மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது என்னைப் பற்றி அவதூறாகவும் உருவக் கேலியும் செய்தார்.

இதைப் பார்த்த பலரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் ஏற்பட்டது. மேலும், வனத்துறை தொடர்பான பல்வேறு கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார் ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் விண்ணப்பம் செய்தபோது அப்படி எந்த வழக்கும் எனக்கு எதிராக இல்லை என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே, என்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த பாபி சிம்ஹா, மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யும்படி பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x