Published : 22 Jan 2024 03:46 PM
Last Updated : 22 Jan 2024 03:46 PM

“அயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது” - இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னை: “மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது” என்ற இயக்குநர் பா.ரஞ்சித், “அயோத்தி சென்ற ரஜினி கூறிய பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நான் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லோரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் வசனங்கள் நன்றாக உள்ளது. பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். நடிகர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இயக்குநர் ஜெய்யும், நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

ஜெய் தொடக்கத்தில் அனிமேஷன் படம் இயக்கப்போவதாக சொன்னார். பின்னர் ‘காலா’ படத்தில் உதவி இயக்குநராக ஜெய் பணியாற்றினார். நண்பன் உதவி இயக்குநராக இருந்தது சங்கடமாக இருந்தது. 2 படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய பின் இப்போது படம் இயக்கியிருக்கிறார். சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்ட மனிதர் ஜெய். ‘நீ படம் எடு. நான் தயாரிக்கிறேன்’ என சொன்னேன். அதன்பிறகு தான் இந்தப் படத்தை தொடங்கினோம்” என்றார்.

தொடர்ந்து, “இன்று மிக முக்கியமான நாள். மிகவும் தீவிரமான ஒரு காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும், 5, 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்பாக நம்மை நாமே பண்படுத்திக்கொள்ள வேண்டும்.

மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும், மதவாதத்தையும் அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கலையை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறோம். பிற்போக்குத்தனங்களை கலை அழிக்கும் என நம்புகிறோம். இந்தியாவை மோசமான காலக்கட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை நாம் செய்ய வேண்டும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமர் கோயில் திறப்புக்கு பின்னால் இருக்கும் மத அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது. மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது. கோயில் கூடாது என்பது நமது பிரச்சினையில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பது தான் நம் கவலை.

இந்தியாவில் இப்படி ஒரு கோயில் திறப்பது அரசியலாக்குவதுதான் சிக்கல். நடிகர் ரஜினிகாந்த் கோயிலுக்குச் சென்றது அவருடைய விருப்பம். ஆனால், 500 ஆண்டுகள் பிரச்சினை தீர்ந்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவர் கூறியது சரியா, தவறா என்பதைத் தாண்டி அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மோசமானது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x