Published : 14 Jan 2024 09:36 AM
Last Updated : 14 Jan 2024 09:36 AM
விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல்லில் சிதறிய ஒரு பொருள் (ஸ்பார்க்) கார்ப்பரேட் வில்லனிடம் (ஷரத் கெல்கர்) கிடைக்கிறது. அவர் அதை வைத்து பூமியின் மையப் பகுதியைத் தோண்டி எரிபொருளுக்கான வளங்களை எடுப்பதற்கான திட்டத்தைத் தொடங்குகிறார். வேற்று கிரகத்தில் வசிப்பவர்கள், இந்தத் திட்டத்தால் பூமி அழிந்துவிடும் என்பதை உணர்ந்து தங்களில் ஒருவனை பூமிக்கு அனுப்புகிறார்கள். பூமிக்கு வரும் அந்த வேற்று கிரகவாசி வில்லனுடனான மோதலில் ஸ்பார்க்கை அபகரித்துக்கொண்டு தன்னை அழைத்துவந்த விண்கலத்தைப் பறிகொடுக்கிறார். கிராமத்தில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றில் அக்கறைகொண்ட விவசாயியான தமிழ் (சிவகார்த்திகேயன்) பிழைப்புக்காக சென்னைக்கு வருகிறார். வேற்றுகிரகவாசி, தமிழுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்கிறார். அதற்கு டாட்டூ என்று பெயர் வைக்கிறார் தமிழ். இருவரும் சேர்ந்து விண்கலத்தை மீட்க முயல்கிறார்கள். வில்லன், டாட்டூவிடமிருந்து ஸ்பார்க்கை மீட்க முயல்கிறார். இந்தப் போட்டியில் வெல்வது யார்? இதனால் தமிழுக்கு என்ன ஆனது? பூமி காப்பாற்றப்பட்டதா? என்னும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக் கதை.
வேற்றுகிரக மனிதர்கள் பூமிக்கு வருவது போன்ற படங்கள் ஹாலிவுட்டில் அதிகம். தமிழில் அரிது. அதுவும் ஹாலிவுட் படங்களில் அவர்கள் பூமிக்குத் தீங்கு விளைவிக்க வருவதாகவே சித்தரிப்பார்கள். அதற்கு மாறாக பூமியைக் காப்பாற்ற வருவது என்னும் புதிய கோனத்தைக் கையில் எடுத்ததிலேயே கவர்ந்துவிடுகிறார் இயக்குநர் ரவிக்குமார். இவரது முதல் படமான ‘இன்று நேற்று நாளை’, காலப் பயணத்தை முன்வைத்து சுவாரஸியமாக எடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு அறிவியல் மிகையதார்த்த கதையைக் கையில் எடுத்திருக்கிறார் அவர். கிராபிக்ஸ் காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத மேம்பட்ட தரத்தில் அமைந்துள்ளன. வேற்றுகிரகவாசிகளும் அவர்களது உலகமும் உருவாக்கப்பட்டிருப்பதில் கிராபிக்ஸ் குழுவினரின் பிரம்மாண்ட உழைப்பு தெரிகிறது. அதேபோல் டாட்டூ கதாபாத்திரமும் அதன் பேச்சு, செயல்பாடுகள், குழந்தைகளையும் பெரியவர்களையும் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
வேற்றுகிரகவாசி, நாயகன், அவர் நண்பர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைக் காட்சிகள், வில்லனுடனான மோதல்கள், நாயகனுக்கும் வில்லனின் அடியாட்களுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.அதே நேரம் கதை- திரைக்கதை வலுவற்றதாகவும் இயற்கை விவசாயம் போன்ற ஏற்கெனவே பல படங்களில் பேசப்பட்ட விஷயங்களை மீண்டும் பேசுவதாகவும் உள்ளது. நாயகன், வில்லன், வேற்றுகிரகவாசி ஆகியோருக்கு வலுவான பின்னணிகள் இல்லாததும் படத்துடன் ஒன்றுவதைத் தடுக்கிறது.
வேற்று கிரகவாசி பூமிக்கு வருவது,விண்கலம், ஸ்பார்க் ஆகியவை குறித்து இன்னும் தெளிவான விளக்கங்களை அளித்திருக்கலாம். சிவகார்த்திகேயன், கதாபாத்திரத்துக்குத் தேவையானதை அர்ப்பணிப்புடன் தந்து மனதில் இடம்பிடிக்கிறார். ணவர்களுக்கு அறிவியல் கற்றுத் தருபவர் என்று வழக்கத்துக்கு மாறான பின்னணி கொடுக்கப்பட்டிருந்தாலும் நாயகி ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரம் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. சிவகார்த்திகேயனின் கிராமத்து நண்பராக பாலசரவணன், நகரத்து நண்பர்களாக கருணாகரன், யோகிபாபு ஆகியோர் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் இஷா கோபிகர் வீணடிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் சித்தார்த்தின் குரல், டாட்டூ கதாபாத்திரத்தை மேலும் ரசனைக்குரியதாக மாற்றுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள், பின்னணி இசை கவரவில்லை. கருணாகரனின் வீடு, வில்லன், அலுவலகம் என முத்துராஜின் கலை இயக்கம் கவனம் ஈர்க்கிறது.வேற்றுகிரக மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட பொழுதுபோக்குப் படமாக ‘அயலான்’, குறைகளைக் கடந்து கவர்கிறான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment