Last Updated : 12 Jan, 2024 06:50 PM

 

Published : 12 Jan 2024 06:50 PM
Last Updated : 12 Jan 2024 06:50 PM

கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி?

வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன்.

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார். ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்கப்படுகிறார். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே திரைக்கதை.

ஆங்கிலேயே ஆதிக்கத்தையும், அரசனின் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் இணைத்து, அதனைச் சுற்றி ‘மாஸ்’ தருணங்களை கட்டமைத்து அழுத்தமான கதையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சுதந்திர போராட்டக் கதையை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளிருந்து சொல்ல முயன்றது சிறப்பு. “முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம். கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசும் வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்து கதவுகளையும் பதம் பார்த்தற்கு பாராட்டுகள்!

தனுஷின் இன்ட்ரோவும், அவருக்கான மாஸ் காட்சிகள் எழுதப்பட்ட விதம், ரசிகர்களுக்கான பிரத்யேக விருந்து. குறிப்பாக பரபர சேஸிங்கில், புகுந்து விளையாடும் கேமராவும், இமைக்கும் நொடியில் வரும் இன்டர்கட் ஷாட்ஸுடன் படமாக்கப்பட்ட இடைவேளைக் காட்சி அட்டகாசமான திரையனுபவம். 6 அத்தியாயங்களாக பிரித்து சொல்லப்படும் இக்கதையில் அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வன்முறைக் காட்சிகளும், தெறிக்கும் தோட்டாக்களும், ரத்தமும் சதையுமான திரைக்கதைக்கு தேவையாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் உணர்வைத் தருகிறது.

தனுஷுக்கும் சிவராஜ்குமாருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போகிறது. சிவராஜ்குமாரும், தனுஷும், சந்திப் கிஷனும் இணையும் இறுதிக் காட்சி ‘சூப்பர் ஹீரோ’ படத்துக்கு நிகரான சினிமாட்டிக் அனுபவம்.

எனர்ஜியூட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் படமாக்கப்பட்ட விதம், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஆகியவை ஓடிடி காலத்திலும் திரையரங்கில் படம் பார்ப்பதற்கான நியாயத்தை உறுதி செய்கிறது. “கோயில் கருவறைக்குள்ள நம்ம போகலாமா?” என கேட்கும்போது, “போக கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லலயே”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ போன்ற வசனங்கள் அப்லாஸ் அள்ளுகின்றன. தனுஷ் பாத்திரம் ஒன்றை கழுவிக்கொண்டிருக்க, நிவேதிதா சதீஷ் துப்பாக்கியை துடைக்கும் காட்சி அட்டகாசம்.

மூன்று வெவ்வேறு தோற்றங்கள், அதற்கேற்ற உடல்மொழி, தன் மக்களை கொல்லும் இடத்தில் அஞ்சி நடுங்குவது, குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகுவது, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்கும் இடங்களில் ‘அசுர’த்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

சிவராஜ்குமாரின் சர்ப்ரைஸ் இன்ட்ரோவில் ‘ஜெயிலர்’ பட நடையாக இருந்தாலும் அவரது ஸ்கிரின் ப்ரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. சந்தீப் கிஷன் கேமியோவில் கவனம் பெறுகிறார். ஆக்‌ஷனில் களமிறங்கும் நிவேதிதா சதீஷ், ஓரிடத்தில் ஆக்ரோஷம் கொ(ல்)ள்ளும் பிரியங்கா மோகன் கதாபாத்திரங்களும் ரொமான்ஸுக்காக பயன்படுத்தபடுத்தாமல் கதைக்களத்துடன் ஒன்றியே பயணிக்க வைப்பதன் வழியே இயக்குநர் அருண் தனித்து தெரிகிறார். இருவரும் நடிப்பில் குறையில்லாமல் கொடுத்ததை செய்துள்ளனர்.

துணைக் கதாபாத்திரங்களான இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ், நன்றாகவே எழுதப்பட்டுள்ளன. அடுத்த பாகத்துக்காக அதிதி பாலன். இந்தப் படத்தில் பெரிய அளவில் வேலையில்லை.

உடுக்கை சத்தம் ஒலித்தபடி கொடுக்கப்படும் தனுஷின் இன்ட்ரோ தொடங்கி காட்சிகளுக்கான மாஸை மெருகேற்றி சின்ன சின்ன சீன்களை செதுக்கியது வரை ஜி.வி.பிரகாஷ் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், ‘உன் ஒளியிலே’ பாடலை ஷான் ரோல்டனின் வெர்ஷனை படத்தில் வைத்திருக்கலாம். சித்தார்த் நுனியின் கேமராவும், நாகூரான் ராமசந்திரனின் கட்ஸும் இன்டர்வல் ப்ளாக்கையும், க்ளைமாக்ஸையும் ரசிக்க வைக்கின்றன.

பொறுமையாக நகரும் காட்சிகளும் அதீத வன்முறையும் சிலருக்கு அயற்சியை கொடுக்கலாம். தாய் இறந்துவிட்டதாக ஓரிடத்தில் வசனத்தில் சொல்லப்படும். அந்த வசனத்தையே இரண்டாம் பாதியில் மீண்டும் காட்சியாக்கியிருப்பது ஏன் என தெரியவில்லை. அதேபோல, பிரிட்டிஷ் ராணுவப் படையில் இணைந்தால், தன் மக்களை கொல்ல வேண்டியிருக்கும் என்பது கூடவா தனுஷுக்கு தெரிந்திருக்காது என்பன போன்ற லாஜிக் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.

இறுதியில் வரும் சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான நோக்கமும் தேவையும் பெரிய அளவில் கதையில் இருப்பதாக தெரியவில்லை. அதன்பின் வரும் காட்சிகளும் சற்று இழுவை.

நாட்டார் தெய்வ வழிபாடு, கம்யூனிசத்தின் தூவல், ஆதிக்குடியினரின் நிலப்பறிப்பு, சாதிய பாகுபாடு, பிரிட்டிஷ் ஆதிக்கம் என பல சப்ஜெக்ட்டுகளை தொட்டிருக்கிறது படம். ஆனால், இதில் காட்டப்படும் பல விஷயங்கள் சுதந்திரத்துக்கு முன் நிகழ்வதாக சொன்னாலும் இன்றும் பொருத்திப் பார்க்க முடிவது படத்தின் பலம். மொத்தத்தில் திரையனுபவத்துக்கு ஏற்ற வன்முறை கலந்த வெகுஜன சினிமா எல்லோருக்குமானதாக இருக்குமா என்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x