Published : 06 Jan 2024 06:07 AM
Last Updated : 06 Jan 2024 06:07 AM

தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை நடிகர் விஜய்சேதுபதி கீழமை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகருமான மகாகாந்தியும் கடந்த 2021 நவ.2 அன்று பெங்க ளூரு நீதிமன்றத்தில் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். இந்த விவகாரத்தில் தன்னை தாக்கிவிட்டு அவதூறாக பேசிய தாக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்திமனுதாக்கல் செய்திருந்தார்.

அந்தமனுவை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர்நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய்சேதுபதி ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் பிறப்பித்தது. அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விஜய் சேதுபதிக்கு எதிரான இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென கடந்த ஜூலை 29-ல்உத்தரவிட்டது.

அதேநேரம் பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த பிரச்சினைக்கு சென்னையில் வழக்கு தொடர முடியாது எனக்கூறிவிஜய் சேதுபதிக்கு எதிரான தாக்குதல் புகாரை ரத்து செய்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விஜய்சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தா்ர்.

அதில் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக உள்ள கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.நடிகர் மகாகாந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பெண்ட் தினேஷ், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்குதொடரப்பட்டுள்ளதால், அதை ரத்துசெய்யக்கூடாது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே என்றும் இருதரப்பும் பேசியதா என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய்சேதுபதி தரப்பில், இதுதொடர்பான பரஸ்பர சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது, தனக்கு எதிராக அவதூறு பரப்பியது எதிர்தரப்பு தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், தனக்கு எதிரான கிரிமினல் அவதூறுவழக்கை விஜய்சேதுபதி கீழமை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு விஜய் சேதுபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x