Published : 04 Jan 2024 04:42 PM
Last Updated : 04 Jan 2024 04:42 PM

“எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம்...” - நடிகர் தனுஷ் ஆதங்கம்

சென்னை: “எது செய்தாலும் ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. எதைப் பேசினாலும் பார்த்துப் பார்த்து பேச வேண்டியுள்ளது” என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சந்தீப் கிஷன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக் குழுவினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷ், “இந்தப் படத்தைப் பற்றி நினைக்கும்போது எனக்கு நினைவுக்கு வருவது ‘உழைப்பு’. அவ்வளவு உழைப்பு இதில் உள்ளது. இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். 2002-ம் ஆண்டிலிருந்து நான் சிறுகச் சிறுக சேர்த்த துளிகள் எல்லாம் இன்றைக்கு பெரும் வெள்ளமாக திரண்டு வந்துள்ளீர்கள். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் படக்குழுவினருடைய உழைப்பைப் பார்த்ததும் நான் கஷ்டப்பட்டேன் என்று சொல்லவே கூச்சமாக உள்ளது. அப்படியான உழைப்பு அவருடையது.

அருண், வெற்றி மாறன் என நான் சில இயக்குநர்களுடன் தொடக்கத்தில் இருந்தே வேலை பார்த்திருக்கிறேன். கேப்டன் மில்லர் படத்தின் லைனை 15 நிமிடங்கள் சொன்னார் அருண். மிகப்பெரிய ஸ்கேலில் இருந்தது படம். அப்போது அவரிடம் ஆக்‌ஷன் காட்சிகளை பண்ணிட முடியுமா என கேட்டேன். இன்று படத்தைப் பார்க்கும்போது சிறப்பாக வந்துள்ளது. அருண், இந்தப் படம் மூலமாக உங்களுக்கு நிச்சயம் பெரிய பெயர் கிடைக்கும். இதே அரங்கில் உங்களுக்குக் கரவொலிகள் எழும்பும்” என வாழ்த்தினார்.

தொடர்ந்து, “இந்தப் படத்தின் கடைசி 30 நிமிடங்களைப் பார்க்கும்போது எனக்கு திருப்தியாக இருந்தது. பார்க்கும் உங்களுக்கும் அதுதான் தோன்றும் என நினைக்கிறேன். ‘மரியாதைதான் சுதந்திரம்’ (Respect is freedom) என்கிற டேக்லைன் கேப்டன் மில்லர் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்போது எதற்கு, இங்கே மரியாதை இருக்கிறது, யாருக்கு சுதந்திரம் இருக்கிறது, எது செய்தாலும் அதில் குறை சொல்ல ஒரு கூட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது. எதைப்பேசினாலும் பார்த்துப் பார்த்து பேச வேண்டியுள்ளது. எது எதற்கோ ஓடுகிறோம் செய்கிறோம் ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம்.

நமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அந்த ஆட்டம் நின்றுவிடும். நமது முக்கியத்துவம் எது என்று தெரிந்து விடும். இந்த படம் மிகவும் புதிதாக இருக்கும் என்று நம்புகிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மாரி செல்வராஜின் செயல்களால் அவர் மீதான மரியாதை கூடிக்கொண்டே போகிறது” என்றார். இறுதியில் “வடசென்னை 2-ம் பாகம், வரும் கண்டிப்பாக வரும். இத்தனை உள்ளங்கள் கேட்கும்போது கண்டிப்பாக வரும்.அதை எப்படி மிஸ் பண்ணுவேன்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x