Published : 04 Jan 2024 09:51 AM
Last Updated : 04 Jan 2024 09:51 AM

“வாழ்நாள் முழுக்க குறையாகவே இருக்கும்” - விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய கார்த்தி

சென்னை: “கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வரமுடியாதது என் வாழ்நாள் முழுக்க ஒரு பெரிய குறையாகவே இருக்கும்” என்று கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கார்த்தி கண்கலங்கியபடி பேசினார்.

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி தனது தந்தை நடிகர் சிவகுமாருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “கேப்டன் நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்ய முடியவில்லை என்பது என் வாழ்நாள் முழுக்க ஒரு பெரிய குறையாகவே இருக்கும். அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததில்லை.

நான் சிறுவனாக தி.நகரில் இருந்தபோது, அவருடைய வீட்டில் தினமும் யாருக்காவது சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் சங்கத்தில் நாங்கள் ஜெயித்தபிறகு அவரை நேரில் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். நடிகர் சங்கத்தில் பெரிய சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம்.

அவர் மிகப்பெரிய ஆளுமை. நம்முடன் அவர் இல்லை என்பது பெரிய வருத்தம். எங்கள் மனதில் அவர் எப்போதும் இருப்பார். வரும் 19ஆம் தேதி அவருக்காக ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அவருடைய புகழ் எப்பவும் நிலைக்கும் வகையில் நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் அனைத்தையும் அங்கு சொல்வோம்” இவ்வாறு கார்த்தி கண்கலங்கிய படி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x