Published : 05 Jan 2018 11:01 AM
Last Updated : 05 Jan 2018 11:01 AM
உழைப்பு, தொழில் மேல் அக்கறை, மரியாதை, ஒழுக்கம், கொடுத்த வாக்கை கடைபிடிப்பது போன்ற அனைத்திற்கும் நேர் எதிரானவர் நடிகர் ஜெய் என்று 'பலூன்' தயாரிப்பாளர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இயக்குநர் சினிஷ் தான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும், படக்குழுவினர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். யார் மீது இந்த குற்றச்சாட்டு என்று தெரியாமல் இருந்தது.
தற்போது நடிகர் ஜெய் மீது 'பலூன்' தயாரிப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், தங்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 'பலூன்' தயாரிப்பாளர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எங்களது 'பலூன்' திரைப்படம் கடந்த 2016 ஜூன் 6-ம் தேதி படப்பிடிப்பு துவங்கி டிசம்பர் 29,2017 வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை நாங்கள் 2017 ஜனவரி மாதமே வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அது முடியாமல் 9 மாதங்கள் கழித்து டிசம்பரில் வெளியாக முக்கியமான காரணம் நடிகர் ஜெய்.
2016, ஜுன் மாதம் தொடங்கிய 'பலூன்' திரைப்படம், 2017 ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜெய் படத்திற்காக தேதிகளை சரிவர கொடுக்காமலும், படப்பிடிப்பிற்கு வராமலும், சரியாக எங்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பருக்கு தள்ளிப்போனது. பின்னர் செப்டம்பர் ரிலீஸ் வேளையில் இருந்தபோது, டப்பிங்க்கு கூட அவர் வராமல் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் எங்களால் ஒரு வருடம் கழித்து கடந்த 2017 டிசம்பர் மாதமே திரைக்கு வர முடிந்தது.
உழைப்பு, தொழில் மேல் அக்கறை, மரியாத, ஒழுக்கம், கொடுத்த வாக்கை கடைபிடிப்பது போன்ற அனைத்திற்கும் நேர் எதிரானவர் நடிகர் ஜெய். அவர் சூட்டிங் ஸ்பாட் முதல் டப்பிங் வரை கொடுத்த டார்ச்சரால் எங்கள் இயக்குநர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார். அதற்கு தயாரிப்பாளர்களான நாங்களும் இதர கலைஞர்களும் சாட்சி.
ஜெய் கொடுத்த டார்ச்சரை மனதில் கொண்டு, எங்கள் மேல் இரக்கம் கொண்டு அனைத்து மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எங்களுடன் கடைசி வரை ஒத்துழைத்து, இந்த படம் வெளியாக உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
கொடைக்கானலில் நாங்கள் 20 நாட்கள் படப்பிடிப்பு செய்ய திட்டமிட்டு அதற்காக பல லட்சம் வரை செலவு செய்து, அரங்குகள் அமைத்து, ஜெய் வருவார் என ஒரு மாதம் வரையிலும் காத்திருந்தோம். ஆனால் அவரை போனிலோ, நேரிலோ எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
ஒருவழியாக பின்னர் செப்டம்பர் 26,2016 அன்று படப்பிடிப்பிற்கு வந்தார். ஆனால், அக்டோபர் 5,2016 அன்றே நடிகை அஞ்சலி அவர்களுக்கு வலிப்பு வந்து உயிருக்கே ஆபத்து என்று கூறிவிட்டு விடியற்காலையிலேயே சென்றுவிட்டார். பிறகு விசாரிக்கையில் தான் தெரிந்தது அஞ்சலி அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று, அஞ்சலி அவர்களுக்கே தெரியாமல் ஜெய் கூறிய பொய் அது. அந்த சம்பவத்திற்கு அஞ்சலி அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது பின்னர் தான் எங்களுக்கு தெரியவந்தது. அவர் அப்படி படப்பிடிப்பை தொடராமல் விட்டு சென்றதால் எங்களால் படப்பிடிப்பை தொடரமுடியாமல் பல லட்சம் வரை நஷ்டம் ஆனது.
படப்பிடிப்பின் போது, தினமும் குடித்துவிட்டு தான் படப்பிடிப்புக்கே வருவார். வந்ததும் 'எப்போ பேக்கப் ஆகும்'. எப்போ மீண்டும் ஹோட்டல் ரூம் சென்று குடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே இருந்து, நடிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல், ஒருவகையான மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் கேரவனில் இருந்து வெளியே வர ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். 8 மணி நேரம் சூட்டிங் செய்ய திட்டமிட்டால், இவரை வைத்து 4 மணி நேரம் சூட்டிங் செய்வதே பெரிய போராட்டமாய் சென்று முடியும். அவர் வசதிக்கு எவ்வித குறைகளும் இல்லாமல் பார்த்துகொண்ட எங்களுக்கு அவர் மிகுந்த மன உளைச்சலையும், பொருட் நஷ்டத்தையும் மட்டுமே ஏற்படுத்தினார்.
அவரின் இந்த தவறான நடவடிக்கையை நாங்களும் படத்தின் இயக்குநர் சினிஷ்-ம் சுட்டிக்காட்டினோம். அதில் கோபம் அடைந்து, அந்த காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு தான், அஞ்சலிக்கு உடம்பு சரியில்லை என்று நாடக ஆடி கொடைக்கானலில் இருந்து மிச்ச படப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கு வேண்டுமானாலும் சமர்பிக்க தயாராக உள்ளோம்.
இதனால் எங்களுக்கு 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது, போட்டிருந்த செட் அனைத்தும் மழையில் நனைந்து, நாசமாகி அதற்கு ரிப்பேர் செய்ய ஏற்பட்ட செலவு மட்டுமே 10 லட்சம் ஆனது. அதற்கான ஆதாரங்களையும் நாங்கள் சமர்பிக்க தயார். மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி அவர் ஏற்படுத்திய பொருட்செலவினால், எங்களால் சொன்ன தேதியை தாண்டியே சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்த முடிந்தது. இறுதியாக நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி, என மொத்தமாக ரூ.1.50 கோடி அதிகமாகவே இவரால் செலவானது. அதனால் தெலுங்கிலும் எங்களா சொன்ன தேதியில் படத்தை வெளியிடமுடியவில்லை. தெலுங்கு விநியோகஸ்தர்களிடம் நான் நஷ்ட ஈடு தரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
எனக்கு ஏற்பட்ட அனைத்து நஷ்டமும், நடிகர் ஜெய் அவர்களாலேயே ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டு எங்களை அவதிக்குள்ளாக்கியதும் அவர் தான். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. எங்களுடன் பணிபுரிந்த சக நடிகர்கள் மற்றும் கேமிராமேன், டைரக்டர் உள்பட அனைத்து பணியார்களுக்கும் இது தெரியும்.
அவரால் ஏற்பட்ட இந்த பண நஷ்டம் ரூ.1.50 கோடியை, நடிகர் ஜெய் உடனடியாக எங்களுக்கு செட்டில் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம். தயாரிப்பாளர் சங்கம் இதில் எங்களுக்காக குரல் கொடுத்து உதவுமென முழு நம்பிக்கையுடன், தங்களது உதவியை நாடுகிறோம். நடிகர் ஜெய் போன்ற சில நடிகர்கள் உண்மையான சினிமா தொழிலை நேசித்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்களை தொடர்ந்து காவு வாங்கிகொண்டே வருவது, மனதிற்கு வேதனையாக உள்ளது. மற்றுமொறு அசோக்குமாராக எங்களை இந்த துறை உருவாக்கிவிடும் சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பின்குறிப்பு: இந்த பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னரே, நடிகர் ஜெய் மற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது எங்களைப் போல் தற்போது அவரை வைத்து படம் தயாரித்து கொண்டிருக்கும் அனைத்து சக தயாரிப்பாளர்கள் நன்மையும் கருதி வைக்கும் வேண்டுகோள்
இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இக்கடிதத்தின் மூலம் 'பலூன்' இயக்குநரும் ஜெய் மீது தான் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது நிரூபணமாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT