Published : 29 Dec 2023 09:30 PM
Last Updated : 29 Dec 2023 09:30 PM

கலங்கிய கண்கள்... விலகாத நெஞ்சம் - இறுதி வரை விஜயகாந்தை விட்டு நகராத மன்சூர் அலிகான்!

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். சாலிகிராமம் வீடு தொடங்கி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடந்த நல்லடக்கம் வரை விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலங்கிய கண்களுடன் பங்கேடுத்தார் மன்சூர் அலிகான். அவரது மீளா துயரை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

1990-ம் ஆண்டு வெளியான சத்யராஜின் ‘வேலை கிடைச்சுடுச்சு’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, ‘தங்கமான தங்கச்சி’ படத்தில் நடித்தார். சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மன்சூர் அலிகானுக்கு அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்து அழகு பார்த்தவர் விஜயகாந்த். 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படம் தான் மன்சூர் அலிகானுக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ் திரையுலகில் ஏராளமான நடிகர்கள், இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்ட விஜயகாந்துக்கு, மன்சூர் அலிகானின் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்குள்ளது.

‘மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்’, ‘தாய்மொழி’, ‘ஏழை ஜாதி’ என பல்வேறு படங்களில் மன்சூர் அலிகான் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதால் விஜயகாந்த் மீது எப்போதும் மரியாதையும், அன்பும் வைத்திருக்கும் மன்சூர் அலிகான், ஒரு மேடையில், “எனக்கு பிடிச்ச ஒரே நடிகர் விஜயகாந்த்” என பேசியிருப்பார்.

அண்மையில் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது மன்சூர் அலிகான், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே! நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது பில்டப் செய்தும், டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு உதை உதைப்பீர்களே அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?” என உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தச் சூழலில்தான் விஜயகாந்த்தின் இறப்பு செய்தியைக் கேட்டு வீட்டுக்கு சென்ற மன்சூர் அலிகான் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது கண்ணீருடன் கலங்கியபடியே பொதுமக்களுடன் நடந்து சென்றார்.

பின்னர் தேமுதிக அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் உள்ள பெட்டியின் அருகிலேயே சிறிதும் நகராமல் உடன் இருந்தார் மன்சூர் அலிகான். சொல்லப்போனால் விஜய்காந்த் காலடியிலேயே இருந்தார். காலை தொடங்கி இரவு வரை அங்கேயே கலங்கிய முகத்துடன் உடைந்து போயிருந்த அவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. விஜயகாந்த் மீது கொண்ட பேரன்பினால் கிட்டதட்ட 10 மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே தவமிருந்தார் மன்சூர்.

அவரின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின. தொடர்ந்து இன்றும் கோயம்பேடு அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் வரை அமர்ந்திருந்து தன் ஆசான் விஜயகாந்துக்கு பிரியாவிடைகொடுத்தார். இடையில் சர்ச்சைகளில் மன்சூர் சிக்கினாலும், நன்றி மறக்காத விசுவாசமான அவரது குணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சிலர், “மன்சூர் போல ஒரு நண்பர் போதும்” என கமென்ட் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x