Published : 23 Dec 2023 05:06 PM
Last Updated : 23 Dec 2023 05:06 PM
சென்னை: “மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படிப் பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது” என குத்துச்சண்டை வீராங்கனையும், நடிகையுமான ரித்திகா சிங் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சாக்ஷி மாலிக் போன்ற ஐகான் ஒருவரை இந்த நிலைமையில் பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒருவர் தனது கனவுகளையும், நம்பிக்கையையும் இத்தனை ஆண்டு கால கடின உழைப்பையும் கைவிட்டு, ‘நான் விலகுகிறேன்’ என சொல்வது மோசமான நிலை. போராட்டத்தின்போது அவரை அவமதித்தார்கள், இப்போது இப்படியொரு நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது கொடுமையானது” என பதிவிட்டுள்ளார்.
பின்னணி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியாக “மல்யுத்தத்திலிருந்து விலகுகிறேன்” என்று ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
அவர், “நாங்கள் உண்மையாக தொடர்ந்து போராடினோம். ஆனால், பிரிஜ் பூஷன் போன்ற ஒருவரின் தொழில் பங்குதாரரும், அவரின் நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். பெண் ஒருவர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், அது நடக்கவில்லை” என்று சாக்ஷி கூறினார். அவர் கண்ணீருடன் பேசும் புகைப்படங்கள் வைரலாகின. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT