Published : 22 Dec 2023 06:15 PM
Last Updated : 22 Dec 2023 06:15 PM
சென்னை: “அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். ‘மாமன்னன்’ படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘அயோத்தி’ தேர்வு செய்யப்பட்டது. மாமன்னன் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு பெற்றார். அப்போது பேசிய வடிவேலு, “சர்வதேச திரைவிழா 7 நாட்கள் இங்கே நடக்கிறது. எனக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. சர்வதேச படவிழாவுக்கு நான் இதுவரை சென்றதில்லை.
பழைய படங்களைப் பார்த்தால் சௌகார் ஜானகி அழுதுகொண்டேயிருப்பார். ‘வீட்ல தொல்ல தாங்காம தானே இங்க வந்தோம். நீ ஏன்மா அழுகுற’ என கேட்பார்கள். அழுவதெல்லாம் இப்போது வொர்க் ஆகாது. ஆனால், அப்படியிருந்தும் ‘மாமன்னன்’ கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விருது நீங்கள் எனக்கு கொடுத்தது. அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். இது படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் போல. சீரிய சிந்தனைவாதி. நாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர் கண்முன் கொண்டுவருகிறார். அந்தக் காட்சியில் காமெடி நிறைய இருக்கிறது. அதனை முன்பே சொல்லியிருந்தால் படத்துக்கு போயிருக்க மாட்டீர்கள்.
‘மாமன்னன்’ படத்தின் காட்சிகளை கொஞ்சம் திருப்பினால் காமெடியாகிவிடும். ஒரு காட்சியில், ‘கதவ சாத்திட்டு ஏங்க உள்ள உட்காரணும்’ என மாரி செல்வராஜிடம் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘அண்ணே சிரிச்சுடாதீங்க’ என்றார். சீரியஸான அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிறைய காமெடி நடந்தது. ஒரே ஒரு ‘மாமன்னன்’ படத்தில் நடித்தேன்... இப்போதெல்லாம் எனக்கு வரும் கதைகள் ஒரே சோகக் கதைகளாகவும், அழுகை கதைகளாக வருகிறது. அவர்களிடம் நான் கொஞ்ச நாட்கள் ஆகட்டும். பிறகு இப்படியான கதைகளில் நடிக்கிறேன் என்று சொன்னேன். மாமன்னன் படம் மக்களிடம் சென்று சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT