Published : 08 Jan 2018 04:01 PM
Last Updated : 08 Jan 2018 04:01 PM
'பலூன்' தயாரிப்பாளர் ஜெய் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறியுள்ள நிலையில், 'ஜருகண்டி' தயாரிப்பாளர் ஜெய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது.
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் மற்றும் தயாரிப்பாளர் இணைந்து நாயகன் ஜெய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். நடிகர் சங்கத்திலும் புகார் அளித்து தங்களுடைய பிரச்சினையைத் தீர்த்த பிறகே இதர படங்களில் ஜெய் நடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
'ஜருகண்டி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பத்ரி கஸ்தூரி, ஜெய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "பலூன் திரைப்பட வெற்றிக்கு வாழ்த்துகள் ஜெய். பலூன் தொடர்பான யூகங்களை படித்தேன். ஆனால் ஜருகண்டி திரைப்பட உருவாக்கத்தில் அம்மாதிரியான எந்த தாமதத்தையும், முறையற்ற அணுகுமுறை எதையும் உங்களிடம் நான் காணவில்லை. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் " என்று படத்தின் நாயகன் ஜெய்க்கு தெரிவித்திருக்கிறார்.
'பலூன்' தயாரிப்பாளர் தன் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஜெய் இதுவரை எந்தவொரு பதிலுமே தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT