Published : 13 Dec 2023 05:17 AM
Last Updated : 13 Dec 2023 05:17 AM
நடிகை பண்டரிபாய், தனது பாண்டுரங்கா புரொடக்ஷன்ஸ் மூலம் ‘அவளும் பெண் தானே’ படத்தைத் தயாரித்தார் . இந்தப் படத்தின் கதைக்கு புதுமுகம்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், சுமித்ராவை அறிமுகப்படுத்தினார் துரை. சுமித்ரா கதாநாயகியாக அறிமுகமான படம் இது. முத்துராமன் கதாநாயகன். எம்.ஆர்.ஆர்.வாசு, காந்திமதி, எஸ்.வி.சஹஸ்கரநாமம், தேங்காய் சீனிவாசன், மனோரமா, எம்.என்.ராஜம் உட்பட பலர் நடித்தனர். வி.குமார் இசை அமைத்த இந்தப் படத்துக்கு பாடல்களை வாலி எழுதினார்.
வாழ்க்கையில், சூழ்நிலைகளால் தடம்மாறிவிடுகிற பெண்ணை சமூகம் எப்படிப்பார்க்கிறது என்பதும் அவளுக்கு வாழ்வளிக்க வரும் நாயகனை அவள் எப்படி எதிர்கொண்டு என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் கதை. இந்தப் படத்தின் வசனங்களும் சுமித்ராவின் நடிப்பும் பாராட்டப்பட்டன. எடுத்துக்கொண்ட விஷயத்துக்காக தணிக்கை குழு, இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்திருந்ததாலும் ரசிகர்கள் இதை ‘ஏ ஒன்’ படம் என்றார்கள் அப்போது.
உதவி இயக்குநராக துரை இருந்தபோது, மைசூரில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு படப்பிடிப்பைப் பார்க்க வந்த பாலியல் தொழிலாளிகள் மீதுதுரைக்கு பரிதாபம் ஏற்பட்டது. அங்கிருந்துதான் அவருக்கு ‘அவளும் பெண் தானே’ படத்துக்கான பொறி தோன்றியது .
வாழ்க்கையில் தவறிய பெண் திருமணத்துக்குப் பிறகு புதிதாக வாழ்க்கையை தொடங்குகிறாள் என்பது போல இந்தப் படத்தின் கிளைமாக்ஸை அமைக்க நினைத்தார் இயக்குநர். ஆனால், அதை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று விநியோகஸ்தர்கள் பிடிவாதமாக இருந்ததால், படத்தின் முடிவு சோகமாக மாற்றப்பட்டது. 1974-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் தனக்கான முத்திரையுடன் இப்போதும் தனித்தன்மையுடன் இருக்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT