Published : 12 Dec 2023 10:58 AM
Last Updated : 12 Dec 2023 10:58 AM
நண்பரின் குடும்பத்தைச் சந்தித்து விட்டு மனைவி கவுரியுடன் (நமீதா பிரமோத்) காரில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அபிஜித் (சைஜூ குருப்). அந்த இரவு நேரப் பயணத்தில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுவிட, அதை வாங்குவதற்காக வெளியே வரும் அபிஜித், மனைவியின் கண்முன்னாலேயே மர்ம உருவத்தால் கொல்லப்படுகிறார். கொன்றது பேயா, பெண்ணா என்கிற குழப்பம் கவுரியையும் போலீஸையும் மண்டையைக் காய வைக்கிறது. கவுரியின் தம்பி நவீன் (காளிதாஸ் ஜெயராம்) தனது குடும்ப இழப்புக்கான வேரைத் தேடத் தொடங்குகிறார். கொலைக்கான பின்னணியை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது கதை.
எல்லா காலத்திலும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கக் கூடிய திரைப்பட வகை ‘ரிவென்ச் டிராமா’. அதை ஹாரர் - த்ரில்லர் - இன்வெஸ்டிகேஷன் கலந்த திரைக்கதை வழியாகக் கொடுக்க முயன்றுள்ளார், மலையாளத்திலிருந்து வந்திருக்கும் வினில் ஸ்கரியா வர்கீஸ். முதல் பாதியில் சில இடங்களிலும் இரண்டாம் பாதியில் சில இடங்களிலும் தர்க்கம் இடறினாலும் திரைக்கதை கொண்டுள்ள சம்பவங்களால் பார்வையாளர்கள் ஊக்கம் குறையாமல் நாயகனின் தேடலுடன் எளிதாக இணைந்து கொள்கிறார்கள்.
பெரும்பாலான கதைகளில் அறத்தின் பக்கம் நிற்க வேண்டிய இடத்தில் நாயகன் இருப்பார். ஆனால், இதில் நடந்த கொலை, ரஜ்னியின் (லட்சுமி கோபால்சாமி) பின்கதையை அறியும்போது அறம் யார் பக்கம் இருக்கிறது, யாருக்கு நம்முடைய சார்பு தேவைப்படுகிறது என்பதில் பார்வையாளர்களைத் திகைக்க வைக்கிறார் இயக்குநர்.
அதேபோல், திருநங்கைகள் பற்றிய தொடக்கச் சித்திரிப்பால் இயக்குநர் மீது கோபம் பற்றிக்கொள்ள, ‘உங்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்; இதற்காகவே அப்படிச் சித்தரித்தேன்’ என்று அவர் நமக்கு ஒரு கட்டத்தில் உணர்த்தும் இடம் நச்.
காளிதாஸ் ஜெயராம், இதில் நவீன் என்கிற பாசமான தம்பியாக உணர வைக்கிறார். கோபம், குழப்பம், பதற்றம், பயம், சாதுர்யம், வேகம், நிதானம் என நடிப்பில் ‘ரோலர் கோஸ்டர்’ ஜாலத்தைக் காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில், நடிப்பில் காளிதாஸை தூக்கிச் சாப்பிடுகிறார் ரஜ்னியாக வரும் லட்சுமி கோபால்சாமி.
காவல் துறை அதிகாரியாக வரும் அஸ்வின் குமார் கதாபாத்திரத்துக்கு மொத்தமாக கத்தரி வைத்திருந்தால் கூட படத்துக்கு எந்தக் குறையும் இருந்திருக்காது.‘4 மியூசிக்’கின் பின்னணி இசையும், இரவுக் காட்சிகளில் மர்மத்தின் நிழலாட்டத்தைத் தக்க வைத்திருக்கும் ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவும் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளன. பிரதான கதாபாத்திரத்தின் மூன்று வித பரிமாணங்களுக்கு ரோனெக்ஸ் சேவியர் தந்திருக்கும் ஒப்பனையை நிறையவே பாராட்டலாம். விடுபட்ட தர்க்கங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘பிளாக் பஸ்டர்’ வெற்றியை எட்டியிருக்க வேண்டிய ஹாரர் - த்ரில்லர் இந்த ரஜ்னி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT