Published : 15 Jan 2018 10:51 AM
Last Updated : 15 Jan 2018 10:51 AM
நம்மிடம் எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்று தனது கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசினார்
இயக்குநர் லிங்குசாமியின் 'லிங்கூ-அய்க்கூ' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது:
'சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை, சரியானவை உன்னைத் தேர்ந்தெடுக்கின்றன’ என்ற தாகூரின் கவிதை ஒன்று ஞாபகம் வருகின்றது. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அனைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக நட்பு இருக்கலாம். ஆனால் இவர்களிடம் நீண்ட ஒரு பிடிப்பு உள்ளது.
பாலாஜி சாரிடம் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை படித்துக் காட்டினேன். என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன், இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதன் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி அவர்கள் இப்போது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு மூன்று வரி கவிதை எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் சென்னைக்கு வந்தேன். இப்போதும், இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போல, நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி
இவ்வாறு லிங்குசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT