Last Updated : 19 Jan, 2018 06:04 PM

 

Published : 19 Jan 2018 06:04 PM
Last Updated : 19 Jan 2018 06:04 PM

2 சதவீதம் மக்கள்தான் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர்: மாதவன் பேட்டி

அமேசான் பிரைம் வீடியோவின் 'ப்ரீத்' என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் டிஜிட்டல் வடிவ படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் மாதவன் பேட்டியளிக்கும் போது 2 சதவீத மக்கள்தான் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கின்றனர் என்றார்

ப்ரீத்

5 வயது மகனுக்கு இன்னும் சில மாதங்களே ஆயுள் என்று ஒரு தந்தையிடம் கூறும்போது எப்படியிருக்கும்? மரணத்தை எதிர்கொள்ளும் தன் மகனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ஒரு தந்தையைப் பற்றிய கதைதான் 'ப்ரீத்'.அமேசான் பிரைம் வீடியோவின் இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தொடர் மூலம் தந்தை கதாபாத்திரத்தில் டிஜிட்டலில் கால்பதிக்கிறார் நடிகர் மாதவன். மயங்க் ஷர்மா இயக்கும் இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லரான 8 எபிசோட்கள் கொண்ட ப்ரீத் ஜனவரி 26-ம் தேதி உலகம் முழுதும் 200 பகுதிகளில் ரிலீஸ் ஆகிறது.

விவேக் ஓபராயின் 'இன்சைடு எட்ஜ்' தொடருக்குப் பிறகு அமேசானின் 2-வது ஒரிஜினல் ரிலீஸ் ப்ரீத் ஆகும். இந்தப் புதிய வடிவம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

 

முழுநேர திரைப்படத்திலிருந்து வேறுபட்ட ஒரு வடிவத்தில் ப்ரீத் தயாராகியுள்ளது, 8 எபிசோட்கள் சுமார் 4 மணி நேரம் ஓடும் இந்தத் தொடரில் நடிப்பது எவ்வளவு கடினமாக இருந்தது?

மிகக் கடினம். என்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையைப் பதிவு செய்ய ஷூட்டிங்கின் போது முதல் முறையாக என் வாழ்க்கையில் குறிப்புகள் எடுக்க வேண்டியதாயிற்று. இறுதி எபிசோடுக்காக ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது முதல் எபிசோடுக்காக சில துணுக்குகளைச் சேர்க்க வேண்டி வரும், அப்போது முற்றிலும் வேறு ஒரு மனநிலைக்கு நான் செல்ல வேண்டும். இன்னும் கஷ்டம் என்னவெனில் ப்ரீத் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் போதே 'விக்ரம் வேதா'வுக்காகவும் முற்றிலும் எதிர்ப்பதமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தேன், இதனால்தான் இரண்டிலுமே என் தோற்றம் ஒரேமாதிரியாக உள்ளது. ப்ரீத்தில் நான் மிகவும் அனுபவித்துச் செய்தது லைவ் சவுண்டில் நடித்ததுதான். தமிழில் இத்தகைய வாய்ப்புகள் அரிதே. இந்தக் காரணிகள்தான் என் கதாபாத்திரத்துக்குள் நான் ஆழமாகச் செல்ல வாய்ப்பை அளிக்கிறது.

திரைப்படத்தில் நீங்கள் தெரிவு செய்யாத ஒரு கதாபாத்திரத்தைச் சின்னத்திரையில் தேர்வு செய்ய முடிகிறதா?

என்னுடைய எதிர்மறைக் கதாபாத்திரங்கள் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றால் நான் 'ஆயுத எழுத்து' போன்ற படங்களிலேயே செய்து விட்டேன். 'ப்ரீத்' தொடர் சாதாரண மனிதன் ஒரு அசாதாரண சூழலுக்கு இழுத்துச் செல்லப்படுவது பற்றிய கதை. இந்தக் கதைக்கு குறிப்பிடத்தகுந்த நீளம் தேவை. முழு நீள படமாக அமைவதற்காக நாங்கள் எதையும் சேர்க்கவில்லை.

இந்தியாவில் அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய ஸ்ட்ரீமிங் சேவைகளின் வெற்றி குறித்து கணிக்கும் முன்பே நீங்கள் இந்தத் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்...

இந்த வடிவம்தான் எதிர்காலமாக இருக்கப் போகிறது. மிகப் பெரிய திரைப்படங்கள் கூட திரையரங்குகளில் 2% மக்கள்தான் பார்க்கின்றனர். சுற்றிப்பாருங்கள்... அனைவரது முதன்மை பொழுதுபோக்கு ஆதாரம் அவர்களது மொபைல் போன்கள்தான். நிறைய படங்களை லேப்டாப்பிலோ, மொபைல் போன்களிலோதான் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். அமேசான் போன்ற சேவைகள் குறிப்பிட்ட வகையான பார்வையாளர்களுக்கு மட்டுமானதல்ல. இது வெகுஜனங்களுக்கும் உரியது, மல்ட்டிபிளக்ஸ் ஆடியன்ஸ்களுக்கும் உரிய வடிவமே. சின்னத்திரை என்பதற்காக படத்தை உருவாக்குவதில் எந்தவித சமரசங்களும் செய்து கொள்ளப் படவில்லை. 'ப்ரீத்'  தொடரை 8k  வடிவத்தில் தயாரித்துள்ளோம், எனவே இது எந்த தியேட்டரிலும் தெள்ளத் தெளிவாக இருக்கும்.

சின்னத்திரை வடிவத்துக்கு வருவதற்கு முன்பாக ஒரு நடிகராக உங்கள் எண்ணங்கள் எப்படி இருந்தன?

என்னுடைய கடைசி 2 படங்கள் (இறுதிச்சுற்று, விக்ரம் வேதா) மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்காவிட்டால் என் எண்ணம் முற்றிலும் வேறு விதமாக இருந்திருக்கும். திரைப்பட நடிகர் ஒருவர் சின்னத்திரைக்கு வந்தாரென்றால், நடிகருக்கு வாய்ப்புகள் இல்லை அதனால்தான் சின்னத்திரைக்கு வந்துவிட்டார் என்று மக்கள் கருதுவார்கள். ஆனால் மேற்கில் இந்த வித்தியாசம் பார்ப்பதில்லை, டாப் நடிகர்கள் டிவி ஷோக்களில், தொடர்களில் நடிப்பது அங்கு சகஜம். இந்த வடிவத்தை சில பல முன் அனுமானங்களுடன் நடிகர்கள் ஒதுக்கினால் இந்த உற்சாகமான புது வடிவத்தை அவர்கள் இழக்கவே செய்வார்கள். நான் முன்கூட்டியே இந்த வடிவத்துக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன், அதுவும் என் திரைப்பட வாழ்க்கையை விடுத்து நான் இதற்கு வரவில்லை என்பதும் முக்கியம். இரண்டு பயோபிக்குகள் என் கைவசம் உள்ளன, ஒரு தமிழப்படம் மற்றும் 'விக்ரம் வேதா'வின் இந்தி ரீ மேக் ஆகியவை கையில் உள்ளன.

கடைசியாக, என்ன ஷோக்களை நீங்கள் இப்போதெல்லாம் பார்த்து வருகிறீர்கள்?

தொடர்ந்து பார்த்து வருகிறேன், இப்போதைக்கு The Marvelous Mrs. Maisel என்பதற்கு நான் அடிமை.

தமிழில்: ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x