Published : 27 Nov 2023 01:04 PM
Last Updated : 27 Nov 2023 01:04 PM
சென்னை: "குஷ்பு போன்றவர்கள் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குஷ்புவின் ட்விட்டர் பதிவுக்கு ஒரு நபரின் பதிலை விமர்சன ரீதியாக எதிர் கொள்ள முடியாமல் ‘எனக்கு உன்னை மாதிரி சேரி மொழி பேச தெரியாது என்று பொது வெளியில் பேசிட்டு, வருத்தம் தெரிவிக்க சொன்னால் முடியாது வேளச்சேரி இல்லையா செம்மஞ்சேரி இல்லையா முடிந்தா வா அப்படி தான் பேசுவேன்” என்று ஆணவத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார்.
சேரியிலிருந்து பல ஜனாதிபதிகளும், முதல்வர்களும், நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சபாநாயகர்களும், சட்டம் இயற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று பல ஆளுமைகள் உருவான பிறகும் அந்த பகுதிக்கு என்று ஒரு அடையாளம், அந்த மக்களுக்கு என்று ஒரு அடையாளம் அந்த மொழி நாம் பேசம் மொழி இல்லை, அது ரொம்ப இழிவான கேவலமான மக்கள் பேசுகிற மொழி என்று இந்த நாகரிக சமூகத்திலும் தொடர்ந்து நான் அதை அடையாள படுத்துவேன் என்கிற குஷ்புவின் ஆணவம் தான் இங்கே கேள்விக்குறி?
கடந்த சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்பு குறிப்பிட்ட சமூக மக்கள் 30 சதவீதம் பேர் வாழும் பகுதி. ஓட்டுக்காக அவர்களை கட்டிபிடித்து அவர்கள் வீட்டு தண்ணீரை குடித்த குஷ்புவுக்கு அவர்களது மொழி மட்டும் இப்போது அருவெறுப்பாக தெரிகிறதா? சக மனிதனை சமமாக நடத்தும் மனநிலைக்கு பெரும்பகுதி மக்கள் மாறி வரும் தற்போதைய நிலையில் அந்த அடையாளத்தை விழாமல் தக்கவைக்க பாசிசத்துக்கு துனை போகும் அடிமை தனத்தை தான் எலைட் வாழ்க்கை வாழும் குஷ்பு இங்கே தொடர்ந்து நிலைபடுத்த விரும்புகிறார்.
எவ்வளவு சமூக முன்னேற்றமும் பொருளாதார தன்னிறைவு அடைந்தாலும் அம்மக்களை என்றும் பொது சமூகத்தில் இருந்து அடையாளபடுத்தி விலக்கி தான் பார்ப்பேன் என்று சூளுரைக்கும் குஷ்புக்கள் வேரறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, கருவறுக்கப்பட வேண்டியவர்கள். இவரை போன்றவர்கள் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT