Published : 25 Nov 2023 05:22 AM
Last Updated : 25 Nov 2023 05:22 AM

‘நவயுக கண்ணகி’ ஆணவக்கொலை பற்றிய படம்!

சென்னை: அறிமுக இயக்குநர் கிரண் துரைராஜ் இயக்கியுள்ள திரைப்படம்,‘நவயுக கண்ணகி’. பெங்களூருவைச் சேர்ந்த இவர், குறும்படங்கள் இயக்கிவிட்டு இந்தப்படம் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். கோமதி துரைராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாடக நடிகர்களான பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். பாடல்களை சின்மயி, சைந்தவி பாடியுள்ளனர். பாடல்களுக்கு ஆல்வினும் பின்னணி இசையை கெவினும் அமைத்துள்ளனர். தர்மதீரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷார்ட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி கிரண் துரைராஜ் கூறியதாவது:

பெங்களூருவுக்கு அருகில் நடந்த, என்னை அதிகம் பாதித்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன். அர்த்தமற்ற ஆணவ படுகொலையில் தனது காதலனை இழக்கும் நாயகிக்கு, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த அவள் திருமணத்துக்கு பின் நவயுக கண்ணகியாக மாறி என்ன செய்கிறார் என்பதுதான் படம். டிசம்பர் 15-ல் வெளியாக இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற கதைகளில் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆணின் தரப்பிலிருந்து தான் கதை சொல்லப்படும். ஆனால் நான், அப்பெண்ணின் மாப்பிள்ளையின் கோணத்தில் இருந்து கதையை சொல்லியுள்ளேன். வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகியவை கதையின் களங்கள். இந்த மூன்று ஊர்களும் மூன்று விதமான மனிதர்களின் குணங்களைப் பிரதிபலிக்கின்றன. என் சொந்த ஊரான வேலூரில் படப்பிடிப்பை நடத்தினோம். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் பெங்களூரு தமிழர்கள். ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு கிரண் துரைராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x