Published : 21 Nov 2023 03:49 PM
Last Updated : 21 Nov 2023 03:49 PM

“கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் வருவார்கள்” - தேனாண்டாள் முரளி நம்பிக்கை

சென்னை: “கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரையும் அழைக்கப் போகிறோம். அவர்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம். யாரையும் கட்டாயப்படுத்த போவதில்லை” என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், ‘கலைஞர் 100’ விழா வரும் டிசம்பர் 24-ம் தேதி (ஞாயிறு) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசுகையில், “அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி, என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம். கருணாநிதி வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர். இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக ரஜினி, கமல், இளையராஜா கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35,000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.

இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர் கலந்துகொள்வர்” என தெரவித்தார்.

மேலும், “பெப்சியில் 25ஆயிரம் பேர் உள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட சினிமாவைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ள சரியான இடமாக சேப்பாக்கம் மைதானம் இருக்கும் என்று நினைத்து தான் அதனை முடிவு செய்தோம். நேரு உள்விளையாட்டு அரங்கம் போதாது என்பதால் சேப்பாக்கத்தை முடிவு செய்தோம். விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க போகிறோம். அவர்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எங்களின் கடமை அவர்களை அழைப்பது தான். வருவது அவரவரின் விருப்பம். க்யூ ஆர் கோடு அமைக்கப்பட்ட பாஸ் இலவசமாக வழங்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்படும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x