Published : 16 Nov 2023 05:53 AM
Last Updated : 16 Nov 2023 05:53 AM
சென்னை: விஜய் சேதுபதி நடித்த ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் டேனியல். அந்தப் படத்தில் இவர் பேசும், “பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற வசனம் பிரபலமானது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் இன்னும் பிரபலமானார்.
இவரிடம் ஒரு கும்பல் புதுவிதமாக மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் டேனியல், செல்போன் ஆப் மூலம் வாடகைக்கு வீடு தேடி இருக்கிறார். அப்போது பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று டேனியலை தொடர்பு கொண்டு ரூ. 17 லட்சம் கட்டினால் லீசுக்கு வீடு பார்த்து தருவதாகக் கூறியது.
அதை நம்பி ரூ.17 லட்சம் கொடுத்தார் டேனியல். மாதா மாதம் தாங்களே வீட்டு வாடகை செலுத்தி விடுவோம் என்றும், இரண்டு வருடத்துக்கு பிறகு பின் ரூ.17 லட்சத்தையும் கொடுத்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் சொன்னபடி போரூரில் உள்ள வீடு ஒன்றுக்கு வாடகைக்கு சென்றார் டேனியல். மூன்று மாதங்களுக்கு பின் வீட்டின் உரிமையாளர் வாடகை தரவில்லை எனக்கூறி, வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். பிறகுதான் டேனியல் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளதாக டேனியல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT