Published : 15 Nov 2023 07:23 PM
Last Updated : 15 Nov 2023 07:23 PM
சென்னை: “என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி” என திரையுலகில் 10 ஆண்டுகள் கடந்திருப்பதையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘பைலட்ஸ்’ மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ‘அச்சனேயெனக்கிஷ்டம்’, ‘குபேரன்’ படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அடுத்து 2013-ம் ஆண்டு இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சர்கார்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான 'மகா நடி' படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். கடைசியாக தமிழில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் திரையுலகில் நடிகையாக நுழைந்து நேற்றுடன் (நவ.14) 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய அப்பா - அம்மாவுக்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். என் குரு ப்ரியதர்ஷனுக்கு நான் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
என் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்துக்கான காரணம் அவர்தான். 10 ஆண்டுகள் நிறைவு செய்தாலும், இப்போதுதான் தொடங்கியிருப்பது போல உணர்கிறேன். இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி. என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்களின் விமர்சனங்களும் எனது வளர்ச்சிக்கு உதவியுள்ளது” என்றார். அவர் நடிப்பில் அடுத்து ‘சைரன்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
With love and Gratitude #10years pic.twitter.com/7oXslvuh8I
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 14, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT