Last Updated : 26 Jan, 2018 01:41 PM

 

Published : 26 Jan 2018 01:41 PM
Last Updated : 26 Jan 2018 01:41 PM

முதல் பார்வை: பத்மாவத்

அதிகார வெறி கொண்ட அலாவுதீன் கில்ஜி மாற்றான் மனைவி மீது தணியாத ஆசை கொண்டு படையெடுத்தால் அதுவே 'பத்மாவத்'.

சிங்கள தேசத்தில் முத்துகளைப் பெறுவதற்காகச் செல்கிறார் சித்தோடு அரசர் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்). அப்போது காட்டில் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோன்) மானைக் குறி வைத்து செலுத்தும் அம்பு, ரத்தன் சிங் மார்பைத் துளைக்கிறது. இதனால் காயப்பட்ட ரத்தன் சிங்குக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவரை குணமடையச் செய்கிறார். இதனிடையே இருவருக்கும் காதல் மலர, திருமணம் புரிந்து பத்மாவதியை சித்தோடுக்கு அழைத்து வருகிறார் ரத்தன் சிங். பத்மாவதியின் அழகில் மயங்கும் ராஜகுரு, ரத்தன் சிங்- பத்மாவதி தனித்து இருக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறார். இதனால் பத்மாவதியின் கூற்றுப்படி, ரத்தன் சிங் உத்தரவால் ராஜகுரு நாடு கடத்தப்படுகிறார்.

டெல்லியை வந்தடையும் ராஜகுரு, அரசன் அலாவுதீன் கில்ஜியை (ரன்வீர் சிங்) சந்தித்து பத்மாவதியின் பேரழைக் கூறி மதி மயங்கச் செய்கிறார். கண்ணால் பார்த்திராத பத்மாவதிக்காக அலாவுதின் கில்ஜி டெல்லியில் இருந்து சித்தோடு நோக்கி படையெடுக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லி வஞ்சகமாக ரத்தன் சிங்கை சிறைபிடிக்கிறார். ரத்தன் சிங் விடுவிக்கப்பட வேண்டுமானால் பத்மாவதி டெல்லி வந்தாக வேண்டும் என்று கில்ஜி சொல்ல, பத்மாவதி என்ன செய்கிறார், ரத்தன் சிங் விடுவிக்கப்பட்டாரா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது பத்மாவத்.

கவிஞர் மாலிக் முகமது ஜயாஸி என்பவர் எழுதிய காவியக் கவிதையான பத்மாவதியை மையமாகக் கொண்டு 'பத்மாவத்' படம் கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலாவுதீன் கில்ஜிக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

ராவல் ரத்தன் சிங் கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் தன்னை பொருத்திக் கொள்கிறார்.

ராஜ புத்திரனுக்கான கொள்கைகளை எந்த நேரத்திலும் தவறாமல் கடைபிடிக்கிறார். அலாவுதீனின் சதித் திட்டத்திற்குப் பிறகும் ஆவேசம் பொங்காமல் பொறுமை காக்கிறார். 'நியாயப்படி போர் செய்திருக்கலாமே அலாவுதீன்' என்று இறுதிவரை கொள்கைக் குன்றாகவே இருக்கிறார். ஆனால், முக்கியமான தருணங்களில் ஒரு பொம்மையைப் போலவே ஷாகித் கதாபாத்திரம் அமைந்துவிடுவதுதான் சோகம்.

ஒளிரும் ஓவியமாக தீபிகா படுகோன் மிளிர்கிறார். கவுரி பூஜையின் போது ஆடும் 'கூமர்' பாடலின் போது நடனத்தில் வசீகரிக்கிறார். விழி ஈர்ப்பு விசையில் காதலை வெளிப்படுத்துவது, கண் கலங்கி கையறு நிலையை வெளிப்படுத்துவது என இரண்டையும் மாற்றி மாற்றிச் செய்வதே அவருக்கான கதாபாத்திரக் கட்டமைப்பாக உள்ளது. இறுதிக் காட்சியில் அவர் பேசும் வசனங்கள் கம்பீரம்.

படம் முழுக்க அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ரன்வீர் சிங். இயக்குநர் இவர் கதாபாத்திரத்துக்கு மட்டும் அதிக மெனக்கெடல் செய்திருப்பது நுட்பமாகத் தெரிகிறது. 'அலாவுதீன் என்றால் அல்லாவுக்கு கூட நம்பிக்கை இருக்காது', 'போரின் ஒரே இலக்கு வெற்றிதான்' என்று வசனம் பேசும் ரன்வீர் தீபிகா மீதான மோகத்தையும், வெறுப்பு, தவிப்பு போன்ற உணர்வுகளையும் அநாயசாமாக வெளிப்படுத்துகிறார்.

மாலிக் கபூர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிம் சர்ப் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். மெஹருன்னிசாவாக நடித்த அதிதி சில காட்சிகளே வந்து போனாலும் கவனம் ஈர்க்கிறார்.

சித்தோடு அரண்மனை, மணற்புயல் காட்சிகள், ஹோலி கொண்டாட்டம், மதில் சுவர்கள், பாலைவனம்,  டெல்லி கில்ஜி அரண்மனை என எல்லா காட்சிகளிலும் சுதீப் சட்டர்ஜியின் கேமரா சுற்றிச் சுழன்றிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இசையும், சஞ்சித் பல்ஹாரா பின்னணியும் படத்துக்குப் பெரும் பலம்.

''பிரச்சினையை வாள் முனையில் நிறுத்துபவனே ராஜ புத்திரன்'', ''சிரம் துண்டித்தாலும் துடிக்கும் இதயத்தோடு போராடுபவனே ராஜ புத்திரன்'', ''ராஜ புத்திரனின் வாள் வீரத்துக்கு இணையாக ராஜ புத்திரியின் வீரம் அவள் காப்பில் உள்ளது'' போன்ற வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

கலை இயக்கம், உடைகள், ஒலிப்பதிவு ஆகிய தொழில்நுட்ப நேர்த்தியில் கவனம் செலுத்தி பிரம்மாண்டம், கவித்துவத்தில் ஈர்க்கும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தொய்வான திரைக்கதை மூலம் படத்தை பலவீனப்படுத்தி இருக்கிறார். அரண்மனைக்குள் இருக்கும் ஆட்களை மட்டுமே காட்சிப்படுத்தி இருப்பவர் மருந்துக்குக் கூட மக்களைக் காட்சிப்படுத்தவில்லை. சதி எனும் உடன்கட்டை ஏறுதலை ஆதரிக்கவில்லை என்று சொல்லும் இயக்குநர் அதை மறைமுகக் காட்சிகளால் பதிவு செய்திருப்பது ஆறுதல். போர்க்களக் காட்சிகளைப் படமாக்கியதில் போதாமையே மிஞ்சி நிற்கிறது. வரலாற்றை மையமாகக் கொண்ட அழகியல் படம் என்ற அளவில் மட்டுமே 'பத்மாவத்'தை ரசிக்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x