Published : 11 Nov 2023 11:44 AM
Last Updated : 11 Nov 2023 11:44 AM
ஹைதராபாத்: ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்த நடிகர் சந்திரமோகன் காலமானார். அவருக்கு வயது 82.
1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் அவருக்கு நடித்தவர் தெலுங்கு நடிகர் சந்திரமோகன். 1966ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் ஆவார். தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சந்திரமோகன். இரண்டு நந்தி விருதுகள், ஒரு ஃபிலிம்ஃபேர் விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
தமிழில் கமல், ஸ்ரீபிரியா நடித்த ‘நீயா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு மருத்துவமனையில் பல உதவிகளை செய்திருந்தார். இந்த நிலையில், இதயநோய் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.11) காலை உயிரிழந்தார். அவருக்கு ஜலந்தர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். வரும் திங்கள்கிழமை (நவ.13) ஹைதராபாத்தில் சந்திரமோகனின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment