Published : 01 Nov 2023 06:58 PM
Last Updated : 01 Nov 2023 06:58 PM
திருவனந்தபுரம்: “தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. நடனம், இசை, சினிமா தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன” என கேரளாவில் நடந்த ‘கேரளீயம்’ (Keraleeyam) விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “கேரள மாநிலம் உருவான நாளான நவம்பர் 1-ம் தேதி ஆண்டு தோறும், ‘கேரளீயம்’ (Keraleeyam) என்ற கலாச்சாரா விழா கொண்டாடப்படும்” என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தொடங்கி ஒரு வாரம் (நவம்பர் 7) நடைபெறும் இந்த விழாவை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மம்மூட்டி, மோகன்லால், கமல்ஹாசன், மஞ்சுவாரியர், ஷோபானா உள்ளிட்ட திரையுலகினரும், யூசுஃப் அலி, ரவி பிள்ளை போன்ற தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர். இதில் கமல், மோகன்லால், மம்மூட்டி ஆகிய மூவரும் வேட்டி, சட்டையுடன் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
விழாவை தொடக்கி வைத்து பேசிய பினராயி விஜயன், “கேரள மக்கள் என அனைவரும் பெருமை கொள்வதற்கான விழாவாக ‘கேரளீயம்’ (Keraleeyam) கொண்டாடப்படுகிறது. அந்தந்த ஆண்டின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த விழா அமையும். மேலும் சகோதரத்துவம் மற்றும் அன்பை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாக இந்த விழாவை பயன்படுத்திக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “கேரளாவில் எப்போதும் எனக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. இங்கிருக்கும் மக்கள் என்னை கலைஞனாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் அரவணைத்திருக்கிறார்கள். இம்மாநிலம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கிருந்து கற்றுகொண்டதை என் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சித்திருக்கிறேன்.
என்னுடைய 21-ஆவது வயதில் நான் ‘மதனோல்சவம்’ (Madanolsavam) என்ற மலையாள படத்தில் நடித்தேன். ஷங்கர் நாயர் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என முடிவெடுத்திருந்தபோது, 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மக்கள் திட்டம்’ (People’s Plan) மூலம் அதிகாரத்தை பரவலாக்கி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்து வரும் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனைப் பெற்றேன். தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளை கையாளும்போது கேரளாவின் மக்கள் திட்டத்தை கவனத்தில் கொள்வேன். .
தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. நடனம், இசை, சினிமா தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கேரளா திகழ்கிறது” என பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT