Published : 01 Nov 2023 05:38 PM
Last Updated : 01 Nov 2023 05:38 PM

“இறைவன் பார்த்துக்கொள்வார்” - தன்னைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து டி.இமான் கருத்து

இமான்

சென்னை: டி.இமானிடம் அவரைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்” என பதிலளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தலைப்பிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் சவரி முத்து இயக்குகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இசையமைப்பாளர் டி.இமான், “இப்படத்தின் இயக்குநர் சவரி முத்து ‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றியிருந்தார். படத்தின் ஸ்கிரிப்ட் நன்றாக உள்ளது. பாடல்களுக்கு தீனி போடும் கதையாக இந்தக் கதை உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி” என்றார்.

அவரிடம், “சமூக வலைதளங்களில் உங்களைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கவில்லையே?” என்ற கேள்விக்கு, “முற்றுப்புள்ளி வைக்க ஒன்றுமில்லை. இறைவன் பார்த்துக்கொள்வார். மனிதர்களைத் தாண்டி எது சரி, தவறு என்பது இறைவனுக்கு தெரியும் என நம்புகிறேன். அவரே எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார்” என்று தெரிவித்தார்.

சர்ச்சை என்ன?: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆனால், அதற்கான காரணம் எதையும் அவர் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் டி.இமான் - அவரது மனைவி மோனிகா ரிச்சர்ட் இருவரின் பிரிவுக்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று பலரும் பதிவிட தொடங்கிவிட்டனர்.

இது தொடர்பாக இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசுகையில், “எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க சிவகார்த்திகேயன் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார். இமான் என்னை விவாகரத்து செய்ய முடிவெடுத்தபோது, அவரை சிவகார்த்திகேயன் ஆதரிக்கவில்லை. இது இமானுக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அது வெளியில் வேறுவிதமாக புரிந்துகொள்ளப்படுகிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x