Published : 26 Oct 2023 11:42 AM
Last Updated : 26 Oct 2023 11:42 AM

“லோகி ஒரு திரைச் சித்தன்” - மன்சூர் அலிகான் திடீர் பல்டி!

சென்னை: இயக்குநர் லோகேஷை பாலஸ்தீனத்துக்கு போராட அழைப்பு விடுத்த நிலையில் இன்று அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நேற்று (அக்.25) மன்சூர் அலிகான் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், “தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு” என்று லோகேஷ் கனகராஜை விமர்சித்திருந்தார். அத்துடன் “வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்” என்று அழைப்பு விடுத்திருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இது தொடர்பாக மீம்ஸ் வெளியிட்டு லோகேஷ், மன்சூர் அலிகான் இருவரையும் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த சூழலில், இன்று (அக்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னுடைய முந்தைய அறிக்கைக்கு மன்சூர் அலிகன் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே! குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோ’வில் ‘தம்மாத்தூண்டு' என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனாக ஆக்கிவிட்டது! அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம். பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

லோகி ஒரு திரைச் சித்தன். 3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன். என் வாழ்நாளில் 350க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை.

நான் தம்பி விஜயுடன் பல படங்களில் வில்லனாக அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு. இப்போது குடும்பம் குடும்பமாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது. தவறாக வசூல் காட்டி வெளியே ‘ஹைனா’வைப்போல் பலர் குரைக்கின்றனர். நான் எதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரபரப்படைகிறது.

என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக ‘லியோ’வில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக! சக்சஸ் மீட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி சந்திப்போம்”. இவ்வாறு மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x