Published : 21 Oct 2023 05:44 AM
Last Updated : 21 Oct 2023 05:44 AM

திரை விமர்சனம்: லியோ

விமர்சனம்

இமாச்சல பிரதேசத்தின் தியோக் பகுதியில், மனைவி சத்யா (த்ரிஷா), மகன் சித்தார்த் (மேத்யூ தாமஸ்), மகள் மதி (இயல்) ஆகியோருடன் வசித்து வருகிறார், பார்த்திபன் (விஜய்). அவர் நடத்தும் காஃபி ஷாப்புக்கு வரும் கொள்ளைக் கும்பல், அவர் மகளைக் கொல்ல முயற்சிக்க, அவர்களைச் சுட்டுத் தள்ளுகிறார், பார்த்திபன். அவர் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவருகிறது. அது, லியோ என நினைத்து, அவரைத் தேடி தெலங்கானாவில் இருந்து, போதைப் பொருள் கடத்தும் கும்பல் தலைவன் அந்தோணி தாஸ் (சஞ்சய் தத்) வருகிறார். 'நீ லியோதானே, வா, மீண்டும் போதை சாம்ராஜ்யத்தை நடத்தலாம்’என அழைக்கிறார். ‘நான் பார்த்திபன்’ என்கிறார் இவர். லியோ யார்? அவருக்கும் பார்த்திபனுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் மீதிக் கதை.

‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தை முதல் பாதிவரை நம்மூர் தட்பவெப்பத்துக்கு ஏற்ப சொல்லியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அன்பான குடும்பம், கடையில் நடக்கும் கொலை முயற்சி, கொள்ளையர்களைப் போட்டுத் தள்ளியதால் நாடு முழுவதும் ஹீரோவாவது, அவரைத் தேடி வரும் தாதா கூட்டம் என விஜய் படங்களில் இருக்கும் ஆக்‌ஷன் பேக்கேஜ் ஸ்டோரியும் களமும் இதிலும் இருக்கின்றன. அதுதான் படத்தின் பலமும். கடைசிவரை லியோ யார் என்ற எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் கொண்டு சென்றதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்.

கழுதைப் புலியைக் காப்பாற்றுவது விஜய்- த்ரிஷாவுக்கான குடும்ப காட்சிகள், ‘கரு கருப்பாயி’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப் உட்பட சில சுவாரஸ்யங்கள் ரசிக்க வைக்கின்றன. தன்னைச் சந்தேகப்படும் த்ரிஷாவிடம் அவர் அழுதபடி பேசும் இடத்தில், விஜய்யின் நடிப்பு இதுவரை பார்க்காதது. பல இடங்களில் விஜய்யின் சிறந்த நடிப்பை அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ். ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த வேகம் சிலிர்க்க வைக்கிறது.

ஆனால், முதல் பாதியில் இருந்த வேகத்தையும் எதிர்பார்ப்பையும் இரண்டாம் பாதி திரைக்கதைப் பூர்த்தி செய்யவில்லை. தலைப்பு கேரக்டரான ‘லியோ’, கொடூரமானவராகக் காட்டப்படுவதால், அந்த கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பு பொசுக்கென்று குறைந்து விடுவதும் நம்பகத் தன்மை இல்லாத ட்விஸ்ட்களும் ஆர்வத்தைக் குறைக்கின்றன.

இயக்குநரின் முந்தையப் படங்களில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல், ஈவு இரக்கமின்றி நடக்கும் கொலைகள், தெறிக்கும் ரத்தம், இருட்டுக் காட்சிகள் என இதிலும் தொடர்கிறது அதே ‘டெம்பிளேட்’. ‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில்’(எல்சியூ) அது இருந்தாலும் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். படம் முடிந்ததும் கமல் குரலில் எல்சியூ-வுக்கும் லீட் கொடுத்திருக்கிறார்.

சஞ்சய் தத் ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்து மிரட்டுகிறார். ஆனால், அவருக்கான திரைவாய்ப்பு போதுமானதாக இல்லை. ‘ஆக்‌ஷன் கிங்’ என்பதால் அர்ஜுன் போடும் சண்டைக் காட்சிகள் தனித்துத் தெரிகின்றன.

அன்பான மனைவியாக த்ரிஷா, வனச்சரகராக கவுதம் வாசுதேவ் மேனன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களான மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, சில காட்சிகளில் வந்து உயிர் விடும் ராமகிருஷ்ணன், லியோவின் சகோதரி மடோனா செபாஸ்டியன், மிஷ்கினின் மச்சானாக மதுசூதன் ராவ், பிரியா ஆனந்த், கைதி மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து உயிர்விடும் அனுராக் காஷ்யப் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

அனிருத் இசையில் பாடல்களும் பின்னணிஇசையும் கவனிக்க வைக்கின்றன. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் பனிப்பிரதேசத்தையும் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில், மொத்த செட்டையும் ட்ரோன் ஷாட்டில் காட்டுவதும் அழகு.

விஜய் வீடு, காஃபி ஷாப் உட்பட கலை இயக்குநரின் உழைப்பு கவனிக்க வைக்கிறது. படத்தில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் அன்பறிவ் மாஸ்டர்களின் உழைப்பு அசாத்தியமானது. குறிப்பாக அந்த கார் சேஸிங் காட்சி. பிலோமின் ராஜின் எடிட்டிங் ஷார்ப் என்றாலும் பின் பகுதி காட்சிகளில் இன்னும் குறைத்திருக்கலாம்.

வழக்கமாக ஆக்‌ஷன் படங்களில் பிளாஷ்பேக் காட்சிகள் வலுவானதாக இருக்கும். அதை இதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். லாஜிக் இல்லாத ஆக்‌ஷன் மேஜிக் பார்க்க விரும்பும் விஜய் ரசிகர்களுக்கு இந்த ‘லியோ’ட்ரீட்தான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x