Published : 20 Oct 2023 04:40 PM
Last Updated : 20 Oct 2023 04:40 PM
இவரை இவர் இயக்க உள்ளார் என்ற தகவல்கள் பரவத் தொடங்கியதிலிருந்து அறிவிப்பு வெளியாகி, க்ளாப்போர்டு அடித்து படப்பிடிப்பு தொடங்கி, படப்பிடிப்பு முடிந்து, டீசர், ட்ரெய்லர், சிங்கிள் என பொறுமையாக எதிர்பார்ப்பு எதிர்பார்த்து காத்திருந்து ‘ஹைப்’ கொடுக்கப்பட் 3 நட்சத்திர நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் இதுவரை வெளியாகிவிட்டன. அந்தப் படங்கள் பேசும் அரசியல், வன்முறை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து சற்றே விரைந்து பார்ப்போம்.
கன்டென்ட்: பொதுவாக இந்திய வர்த்தக சினிமா ‘நாயக’ வழிபாட்டை மையமாக கொண்டது என்பது மறுப்பதற்கில்லை. பெரிய ஹீரோ ஒருவரின் கால்ஷீட்டை பெற்ற இயக்குநர்கள் தங்கள் ஸ்கிரிப்டில் முதலில் எழுதுவது ‘மாஸ்’ தருணங்களைத்தான். அதன்பிறகுதான் கதைக்களம் எல்லாம். ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட மாஸ் அனுபவத்தை கொடுத்துவிட்டு கதையை ஊறுகாய் போல தொட்டுகொள்ளும் ஸ்டார்கள் படம் தான் அதிகம்.
இதிலிருந்து விலகியிருந்தது ரஜினியின் ‘காலா’, ‘கபாலி’. இயக்குநர் பா.ரஞ்சித் கதைக்குள் ‘மாஸ்’தருணங்களை புகுத்தியிருந்தார். அப்படி இந்த ஆண்டு வெளியான மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் ‘கன்டென்டை’ காவு கொடுக்காமல் காத்த படம் என்றால் ‘ஜவான்’ படத்தை சொல்லலாம். உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்த நிகழ்வை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மூலம் சொல்ல வைத்திருந்தார் அட்லீ.
பெருநிறுவன முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யும் வங்களிகள், ஏழைத் தொழிலாளிகளின் கழுத்தை நெரிப்பது போன்றவற்றை தைரியமாக பேசியிருந்தார். பாலிவுட்டில் மாஸ் ஹீரோக்களின் படங்களில் இப்படியான கருத்துகளை பேசுவது அரிது. தேசப்பற்றை தேவையான அளவு ஊற்றி, வழக்கமான மாஸை கூட்டியிருந்தாலும் கன்டென்டாக அக்கறை காட்டியிருந்தார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மாஸ் மற்றும் சண்டைக்காட்சிகளை கழித்துவிட்டு பார்த்தால் கானல் நீரில் மீனைத் தேடுவது போல கன்டென்டை தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான். ஆழமாக தேடிப்பார்த்தால் ‘நேர்மை’க்காக சொந்த மகனைக்கூட பலியிடலாம் என்பதை வலியுறுத்தும் நேர்மையற்று யாரையும் கொல்லலாம், சட்ட ஒழுங்கை மீறலாம் என்பதை ‘நாயக’ வழிபாட்டுடன் பேசியிருக்கும். கிட்டதட்ட விஜய்யின் ‘லியோ’ படத்தில் பார்த்திபன் கதாபாத்திரம் கொன்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும்.
வன்முறை, ரத்தம், சிகரெட், மது, போதைப்பொருள் என ‘ராவாக’ படம் எடுத்துகிறேன் என சொன்னாலும் கதையாக ஒன்றுமில்லை. ‘ஜெயிலர்’ நேர்மையை வலியுறுத்தியது என வைத்துகொண்டாலும், ‘லியோ’வின் சாரம்சம் மூடநம்பிக்கையால் அழிந்த குடும்பம் என எந்த அழுத்தமுமில்லாத கதையாக சுருங்கிவிட்டது. தன் நாயகனுக்காக ரூ.180 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனுக்கு படம் கொடுத்தனுப்புவது?
ஃப்ளாஷ்பேக்: ‘ஜெயிலர்’, ‘லியோ’ கிட்டத்தட்ட இரண்டும் ஒரே வகையறா ஆக்கம். இரண்டும் ‘பாட்ஷா’ படத்தின் நவீன வெர்ஷன்கள். குடும்பத்தை காக்க போராடும் நாயகன். தேவையில்லாமல் வந்து தொல்லை தரும் வில்லன்கள். ‘மும்பையில நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’ என்ற கேள்விக்கான விடையை ஜெயிலர் படத்தில் தேடினால் சிறையில் ரவுடிகளை அடக்கிகொண்டிருந்த ரஜினி. ‘லியோ’வில் தேடினால் அது சென்று சேரும் இடம் ‘டோபாக்கோ’ கம்பெனி. ஜெயிலருக்கு பெரிதாக பின்கதை இல்லை என தள்ளிவிடலாம்.
படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக்கும் தேவையில்லாத ஆணிதான். ‘லியோ’ அப்படியல்ல. அமைதியாக வாழும் நாயகன் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணத்தை விளக்கும் இடங்கள் அழுத்தமாக இருக்க வேண்டியது திரைகத்தையின் அஸ்திவாரம். ஆனால் ‘லியோ’ மிகவும் பலவீனமான பின்கதையால் நிறைய நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிறது. ‘ஜவான்’ ஓரளவுக்கு தீபிகா படுகோனுக்கான சிறைச்சாலை காட்சிகளில் எமோஷனல் ஸ்கோர் செய்திருக்கும். இருந்தாலும் விஜய் சேதுபதியின் பழிவாங்கலுக்கு உரிய தர்க்க ரீதியான நியாயத்தில் வலு இருக்காது.
வன்முறை: மூன்று படங்களுக்கும் பொதுவானது வன்முறைக்காட்சிகள். ‘ஜெயிலர்’ படத்தில் இன்டர்வல் ப்ளாக், ‘ஜவான்’ படத்தில் சேஸிங் சண்டைக்காட்சி, ‘லியோ’வில் கஃபே சண்டைக்காட்சி. மூன்றும் ரசிக்க வைக்கும். வன்முறைக்காட்சிகள் ஓரளவைத் தாண்டும்போது அயற்சியை தந்துவிடுகிறது. ‘லியோ’வின் இறுதிக்காட்சியில் நூற்றுக்கணக்கானோரை ஒரே ஆளாக விஜய் துவம்சம் செய்(வதை) என்ன சொல்வது?
திரைமொழியும், பெண்கதாபாத்திர வடிவமைப்பும்: முன்பே சொன்னது போல அமைதியாக இருக்கும் நாயகன். அவருக்கான மாஸைக் கூட்ட ஒரு முரட்டு பின்கதை. அந்த மாஸின் வழி நிகழ்காலத்திலிருக்கும் வில்லன்களை தட்டி பறக்கவிடுவது. இந்த விதி ‘லியோ’, ‘ஜெயிலர்’ இரண்டுக்கும் பொருந்தும். ஆனால் ஜவானில் நாயகன் ரகட்டான ஆள். ஆனால் அவன் இப்படி ரகடாக மாற காரணம் கடந்த கால அனுபவங்கள். இப்படியான ‘மாஸ்’ நடிகர்களுக்கான சினிமாக்களில் சென்டிமென்ட்+ஆக்ஷன்+ மாஸ் இவை மூன்றும் சரியான கலவையாகும்போது அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறது. ‘விக்ரம்’ கிட்டதட்ட இதை நெருங்கியது.
‘ஜவான்’ படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் ஓரளவுக்கு வொர்க் ஆகின. ஆனால், ஜெயிலரில் அப்பா - மகனுக்கான சென்டிமென்ட்டோ, லியோவிலும் அப்பா - மகன், அண்ணன் - தங்கை, என எந்த சென்டிமென்டும் எடுபடவில்லை. இதனால் முழுமையான கமர்ஷியல் பேக்கேஜ் என்ற புள்ளியில் மேற்கண்ட படங்கள் சொதப்பிவிடுகின்றன. வெறும் சண்டைக்காட்சிகளையும், கூஸ்பம்ஸ் தருணங்களையும் மட்டுமே வைத்து எவ்வளவு நேரம் ஓட்ட முடியும்?
ஜெயிலரை ஒப்பிடும்போது, ‘ஜவான்’ மற்றும் ‘லியோ’ படங்களில் வரும் முன்னணி நாயகி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. ஷாருக்கானுக்கு டஃப் கொடுக்கும் நயன்தாராவும், பின்கதையை தாங்கி நிற்கும் தீபிகா படுகோனும் கதையின் மற்றொரு பலம். அதேபோல விஜய்க்கான பிரச்சினைகளில் உடனிருந்து உண்மையை தேடும் முயற்சியில் த்ரிஷாவும், சின்ன சண்டைக்காட்சிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் மடோனாவும் கவனிக்க வைக்கின்றன.
ஆனாலும், ஜெயிலரில் வில்லன்களிடமிருந்து ரம்யாகிருஷ்ணனையும், மிர்னாவையும் மீட்க அங்கே சிவராஜ்குமாரும், லியோவில் த்ரிஷாவை மீட்க ஹைனா என்ற கழுதைப்புலியும்தான் வரவேண்டியிருக்கிறது. நாயகிகள் கைகளில் கத்தியைக் கொடுத்து அவர்களை அவர்களே மீட்க இந்த நாயகர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை போல.
முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ‘மாஸ்’ காட்சிகளையும் வன்முறையையும் தவிர்க்க முடியாது என சொல்லும் இயக்குநர்கள் குறைந்தபட்சம் அழுத்தமானக் கதையை உள்ளடக்கிய ஒரு முழுமையான வெகுஜன சினிமாவையாவது உருவாக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT